சென்னை: நாடு முழுவதும் 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தோடு 2022-23 நிதியாண்டுக்கான இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. அதற்காக வழக்கம் போல ஜூலை 31ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டது. அதன்படி 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட தகவலில், கடந்த வாரம் முழுக்க அதிகமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டது. வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ வருமான வரி உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது” என வருமான வரித்துறை கூறியுள்ளது.

இந்த நிலையில் 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக வரிக்கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை 6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும்  இந்த மைல்கல்லை அடைய எங்களுக்கு உதவிய வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் AY 2023-24க்கான ITR ஐத் தாக்கல் செய்யாதவர்கள், கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க, தங்கள் ITR ஐ விரைவாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.