டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டில் இருந்து  கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை, தேசிய புலனாய்வு துறை தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

சமீப நாட்களாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு இமெயில் மூலம் குண்டுவெடிப்பு மிரட்டல்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னையில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை(NIA) அலுவலகத்திற்கு வந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் தேசிய புலனாய்வு துறையினரும் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு உள்பட பல நாசகார செயல்களில் ஈடுபட்டு வரும் முக்கிய பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், இங்குள்ள பலர், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதை என்ஐஏ கண்டுபிடித்து வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில்,  : சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள  தேசிய புலனாய்வு முகமை அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியில் பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக காவல் கட்டுப்பாட்டு எண்களை தேசிய புலனாய்வு முகமை அறிவித்திருந்த நிலையில் அந்த எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உடனடியாக சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர் கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர்.

இது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்து அழைப்பு எந்த பகுதியில் இருந்து வந்துள்ளது?, எந்த சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய புலனாய்வு துறையினரும் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.