சென்னை: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமாருக்கு அரசியல் கட்சியினர் பலர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரரை கொடூரமாக கொலை செய்து, தீ வைத்து எரிந்தது தெரிய வந்துள்ள நிலையில்,  கொலை  நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையே தொடர்ந்து. ஜெயக்குமார் கொலை தொடர்பாக அவர் கைப்பட எழுதியதாக கூறப்படும்  கடிதத்தில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட அனைவரிடமும் விசாரணை நடத்திய நிலையில், இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்காமல் காவல்துறையினர்திண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து, ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

முன்னதாக, கடந்த 2-ந்தேதி அன்று ஜெயக்குமார் மாயமான நிலையில் மறுநாள் 3-ந்தேதி காவல்துறையிர் அவர் காணவில்லை என அவரது குடும்பத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே  (மே 4ந்தேதி) ஜெயக்குமார் வீட்டு அருகே உள்ள தனது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கம்பிகளால் சுற்றப்பட்டிருந்த நிலையில் பெரிய கடப்பா கல்லும் கட்டப்பட்டிருந்தது.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடந்த 20 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.  ஜெயக்குமார்  உயிரிழப்பதற்கு இரு நாட்கள்  முன்பு அருகே உள்ள  ஒரு கடைக்கு சென்று  டார்ச் லைட் வாங்கி இருக்கிறார். அது தொடர்பான  வீடியோவும் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியது, ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த இடத்தில் அந்த டார்ச் லைட்டும் இருந்தது. எரிந்து  கருகிய நிலையில்ஜெயக்குமார் உடல்  மீட்கப்பட்டது. தோட்டத்து கிணற்றில் இருந்து கத்தி ஒன்றும் கிடைத்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இருப்பினும் ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளப்போகும் ஒருவர் பெரிய கடப்பா கல்லை உடலில் கட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சில்வர் நிறத்திலான கையடக்க பிரசை வாயில் திணித்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. எனவே ஜெயக்குமாரை யாரோ திட்டமிட்டு கொலை செய்து எரித்துக் கொன்று இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. ஜெயக்குமார் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்கள் அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.

ஜெயக்குமார் உடலை உடற்கூறாய்வு செய்யும்போது, உடல் முழுமையாக எரிந்திருந்தது. முதுகு மற்றும் பின்னங்கால் பகுதிகள் எரியாமல் இருந்தது. கால் மற்றும் உடலில் கம்பி கட்டப்பட்டிருந்தது. அவரின் உடலில் முன்பகுதியில் கல் கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் கழுவும் நார் அவரது வாயில் இருந்தது. இந்த விசாரணைக்கு 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தடவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், சைபர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்தி பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், ஜெயக்குமார் இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கி.மீ. தூரத்திற்கு சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. ஜெயக்குமார் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன் வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். புகார் அளிக்கப்பட்ட தேதி மற்றும் ஜெயக்குமார் காணாமல் போன தேதிக்கு இடையே கரைசுத்துப்புதூர் வந்து சென்ற வாகனங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மொபைல் எண்கள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜெயக்குமார் கொலை தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம், அதில் கூறப்பட்டுள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட அனைவரிடம்,  காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனிடையே,நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஜெயக்குமார் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தன. மதுரை அல்லது மும்பையைச் சேர்ந்த கூலிப்படைக்கு தொடர்பா? என தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருந்தாலும் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து, ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.