சென்னை: மாதந்தோறும் 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக  தமிழ்நாடு  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள், ஓட்டை, உடைசலாக காணப்படுவதுடன் மழை பெய்தால் மழைநீர் பேருந்துகள் பொழிந்து, பயணிகள் பணிக்க முடியாத அவல நிலை காணப்படுகிறது. பல பேருந்துகளில் படிக்கட்டுக்கள் உடைந்து விழுந்த நிகழ்வுகளும், இருக்கையுடன் பேருந்து நடத்துனர் பறந்து சென்று விழுந்த நிகழ்வுகள் மட்டுமின்றி, இருக்கையுடன்பேருந்தில் இருந்து சாலையில் இளம்பெண் விழுந்தது உள்பட பல இடங்களில் உடைந்த பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், பல்வேறு குற்றசாட்டுகளையும் முன் வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் குற்றசாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதில், மாதந்தோறும் 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக  தமிழ்நாடு  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட  அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியின் 2011-21 காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 1,449 பேருந்துகள் (மொத்தம் 14,489 பேருந்துகள்) அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் முந்தைய திமுக ஆட்சியில் (2006-11) ஆண்டுக்கு 3,001 புதிய பேருந்துகள் (மொத்தம் 15,005 பேருந்துகள்) அறிமுகப்படுத்தப்பட்டன.

 கொரோனா பெருந்தொற்று காலத்தில் புதிய பேருந்துகள் வாங்காத காரணத்தினால், வயது முதிர்ந்த பேருந்துகளின் எண்ணிக்கையும், அவற்றின் ஆயுட்காலமும் உயர்ந்துவிட்டதால், அவற்றை கழிவு செய்து படிப்படியாக புதிய பேருந்துகளை மாற்ற வேண்டி உள்ளது. ஜெர்மன் வளர்ச்சி வங்கியின், மூலம் 2213 டீசல் மற்றும் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவது சம்பந்தப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு தகுந்த அறிவுரைகள் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்டு அதன் அடிப்படையில் பேருந்து கொள்முதல் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது பேருந்துகள் கூண்டு கட்டுவதிலும், ஒப்பந்த நிலையிலும் உள்ளது.

முந்தைய அதிமுக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011 முதல் 2021ம் ஆண்டு வரை 10 ஆண்டு காலத்தில் ரூ.23494.74 கோடி என வருடத்திற்கு சராசரியாக ரூ.2,349.47 கோடி மட்டுமே வழங்கியது. திமுக அரசு 2021-24 ஆண்டு வரை 4 ஆண்டு காலத்திற்கு ரூ.29,502.70 கோடி என வருடத்திற்கு சராசரியாக ரூ.7,375.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

மேலும், 2022-23, 2023-24 மற்றும் 2024-25 நிதி ஆண்டுகளில் இந்த அரசு புதிய பேருந்துகள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பேருந்துகளின் கூண்டுகள் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து 7682 புதிய பேருந்துகள் மற்றும் 1000 மின்சாரப் பேருந்துகள் மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் என 8,682 புதிய பேருந்துகள், 1,500 பேருந்துகள் கூண்டு கட்டி புதுப்பிக்க எடுத்த நடவடிக்கையில் இதுவரை 791 புதிய பேருந்துகளும் மற்றும் 858 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மேலும், 2024-25ம் ஆண்டு இறுதிக்குள் 7,682 புதிய பேருந்துகளும் 1,500 கூண்டு புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டிற்கு வர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 300-க்கும் அதிகமான புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டு உள்ளது.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வழங்கிய மாறும் அகவிலைப்படியை மாற்றி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையாக சதவீத அடிப்படையில் அகவிலைப்படி வழங்கியது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பற்றாக்குறை நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் நிதி ஆண்டுகளிலும், புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வயது முதிர்ந்த பேருந்துகளை கழிவு செய்ய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்