ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பாம்பன் சாலைப் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளுக்கான ரூ. 40 லட்சம் மின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செலுத்தாதல், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் இணைப்பை துண்டித்தது. இதனால்,  பளபள என மின்னிய பாம்பன் பாலம் தற்போது இருளில் மூழ்கி காணப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கி.மீ. தொலைவுக்கு கடல் மீது 1914ம் ஆண்டு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ரயில் பயணத்தை மட்டுமே நம்பி பயணித்து வந்தனர்.  பின்னர் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், 1988ம் ஆண்டு சாலைப் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் 181 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து கம்பங்களிலும் அதிக ஒளித் திறன் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டன. பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.

இதற்கிடையில் அங்கு வசூலிக்கப்பட்டு வந்த  சுங்கக்கட்டண வசூலும் நிறுத்தப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு வருமானம் குறைந்தது. இதனால்,பாம்பன் பால பராமரிப்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளங்குகள் பழுதடைந்தால்,  சரி செய்யாத நிலை ஏற்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில்,   சேதமடைந்த  மின் விளக்குகளை மாற்றும் நடவடிக்கை நெடுஞ்சாலைத் துறை எடுக்கப்பட்டது. அதன்படி, , புதிய கம்பங்கள் மாற்றப்பட்டு எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இதனால் பாம்பன் பாலம் மீண்டும் புதுபொலிவு பெற்றது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாகத பாம்பன் பாலத்திற்கு உரிய மின் கட்டணம் செலுத்தப்படவில்லை.என கூறப்படுகிறது. தற்போது வரையில் ரூ.40 லட்சம் வரை மின் கட்டணப் பாக்கி உள்ளது.  மின் கட்டணத்தைச் செலுத்துமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மின்வாரியத்தினார் கடிதம் அனுப்பி வருகின்றனர். மின் கட்டணம் செலுத்தும் அளவுக்கு பாம்பன் ஊராட்சியில் நிதி இல்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், தமிழ்நாடு மின்சாரம் வாரியம், மின்சாரத்தை துண்டித்து உள்ளதாக கூறப்படுகிறத. பாலத்தில் மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில், பெரும்பாலான நேரங்களில் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் ராமேசுவரம் நகராட்சி சார்பில், சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களுக்கும் ரூ.100 முதல் 150 வரை வசூல் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வசூல் செய்து வருகின்றனர். பாம்பன் சாலைப் பாலத்தின் முழு பயனும் ராமேசுவரம் நகராட்சிக்கு மட்டுமே கிடைப்பதால், மின் கட்டணத்தை ராமேசுவரம் நகராட்சியயே செலுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு நகராட்சி மறுப்பு தெரிவிப்பதால், மின்இணைப்பு வழங்குவதில்சிக்கல் நீடித்து வருகிறது.

இதையடுத்து,  பாம்பன் பேருந்து பாலத்துக்கு மின் கட்டணம் செலுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாம்பன் பேருந்து பாலத்தில் அனைத்து மின் விளக்குகளும் எரிவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் எதிர்பார்க்கின்றனர்.