பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும்  பிரஜ்வல் பாஸ்போர்டை ரத்து செய்யுங்கள் என  பிரதமர் மோடிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர்  சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகெளடா பேரனும் ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாகவே முன்னுரிமை பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனி சென்றுவிட்டார்.  அவர்மீது கர்நாடக மாநில அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடா்பாக பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏப்.27ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜொ்மனிக்குச் சென்றுவிட்டாா். இருவா் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏப். 28ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.) கா்நாடக அரசு அமைத்தது.

இதுதொடர்பாக பிரஜ்வல் தந்தை ரேவண்ணாவை கைது செய்து விசாரணை நடத்திய கர்நாடக காவல்துறை, தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரஜ்வல்  பாஸ்போர்ட்டை  ரத்து செய்து, உடனே அவரை இந்தியா அழைத்து வர வேண்டும் என மாநில முதல்வர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே அவர் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் , “பிரஜ்வல் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதை அறிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக ‘அரசு முன்னுரிமை கடவுச்சீட்டை’ பயன்படுத்தி ஏப்ரல் 27-ஆம் தேதி நாட்டைவிட்டு பிரஜ்வல் தப்பிச் சென்றது வெட்கக்கேடானது. சிறப்பு புலனாய்வுக் குழு பிரஜ்வல் மீது லுக்-அவுட் நோட்டீஸ், புளூ கார்னர் நோட்டீஸ் உள்ளிட்டவை பிறப்பித்துள்ளது. ஆகையால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை பாஸ்போர்ட்டை உடனே  ரத்து செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறைக்கு கர்நாடக அரசு இரண்டு நாள்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் அனைத்து சட்ட வழிகளிலும் ஒத்துழைக்க எஸ்ஐடி தயாராக உள்ளது. எனவே, இதில் தலையிட வெளியுறவுத்துறைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். மேலும், வெளியுறவு அமைச்சகம் மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச போலீஸ் ஏஜென்சி மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.