சண்டிகர்: அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு டெம்போ வாகனத்தில் ஏறி சென்று, பொதுமக்களிடையே உரையாடினார். பின்னர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது,  ‘அதானி கூட்டு’, அக்னிவீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை  கடுமையாக சாடினார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரியானா மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு வரும் 25ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இது 18வது லோக்சபா அமைப்பதற்கான  6வது கட்ட தேர்தலாகும். இதைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தில் கடைசி கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரியானா மாநிலம்  மாநிலம் தாத்ரியில்நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது,  இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும், அக்னி வீரர் திட்டம் ரத்து செய்யப்படும் என்றவர், அதானி நிறுவனங்களின் ஊழல் வெளிச்சத்துக்கு வரும் என பட்டியலிட்டார்.

முன்னதாக,  தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியதாக   விமர்சித்திருந்தார்.  இதற்கு பதிலடி கொடுத்த ராகுல்,    காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியது மோடிக்கு எப்படி தெரியும்? முன் அனுபவம் உண்டா? அப்படி காங்கிரஸ் வாங்கியது என்றால் அமலாக்கத்துறை, சிபிஐயை விசாரணைக்கு அனுப்புங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஹரியாணாவில் பிரசாரத்துக்கு இடையே ராகுல் காந்தி டெம்போவின் பின்புறம் நின்றபடி பயணித்துக் கொண்டே மக்களிடம் உரையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ், “மோடியின் டெம்போ நியாயமற்றது, ஆனால் காங்கிரஸ் டெம்போ நியாயமானது” எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக ஹரியாணா காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய ராகுல் காந்தி, ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபத் திட்டத்தை கிழித்து எறிவோம் எனத் தெரிவித்தார்.