வாஷிங்டன்

மிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் சத்துணவுத் திட்டம் அமெரிக்காவில் இன்று முதல்  அமலாக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

வெகு நாட்களுக்கு முன்பு தமிழகத்தைக் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த போது காமராஜர் முதல்வராகப் பதவி வகித்தார்.  அப்போது பல ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தனர்.   இதையொட்டி அவர் அந்த சிறார்களின் பெற்றோரிடம் விசாரித்த போது உணவு இல்லாமல் தாங்கள் திண்டாடுவதால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை எனத் தெரிவித்தனர் 

எனவே காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.  அதன்படி மதியம் ஒரு வேளை உணவு 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.  இந்த உணவுக்காகவே பல ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியதால் குழந்தைகள் கல்வி அறிவு பெற்றனர்.

அதன் பிறகு எம் ஜி ஆர் முதல்வராக பணியாற்றிய சமயத்தில் இந்த திட்டத்தின் கீழ் வரும் குழந்தைகளுக்குச் சத்துணவுத் திட்டம் என பெயர் மாற்றி குழந்தைகளுக்குச் சாதம், குழம்பு, கீரை என விரிவுபடுத்தினார்.  அதை அதன்பிறகு வந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் மேலும் விரிவுபடுத்தி தற்போது முட்டை உள்ளிட்டவற்றுடன் சத்துணவு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், “இன்று குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் புதிய திட்டத்தை அமலாக்கம் செய்கிறேன். இதற்கு அமெரிக்கன் ரெஸ்கியூ பிளான் நிதி உதவி அளிக்கிறது.  இதன் மூலம் 3 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறுவார்கள்.    இது அமெரிக்கக் குழந்தைகளின் பசியைப் போக்கும் என நம்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.