சென்னை

புனித நகரங்களில் வசிப்போருக்கு கொரோனா தடுப்பூசி போட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   அனைத்து  உணவகங்கள், மால்கள், மற்றும் வழிபாட்டுத் தலங்களும் கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர் மற்றும் பழனி என இந்து தலங்கள் உள்ளன. இதைப்போல் கிறித்துவர்களுக்கு வேளாங்கண்ணி, பூண்டி உள்ளிட்டவையும், இஸ்லாமியர்களுக்கு நாகூர், ஆயிரம் விளக்கு எனப் பல புனித தலங்கள் உள்ளன.  இந்த இடங்களில் தற்போது மக்கள் மீண்டும் அதிக அளவில் வர தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன், “தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் உள்ள தாய்மார்கள், வர்த்தகர்கள், நிறுவன ஊழியர்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அவ்வகையில் புனிதத் தலங்களில் வசிப்போருக்காகச் சிறப்பு தடுப்பூசி முகாம்களைத் தமிழக அரசு அமைக்க உள்ளது.

இதையொட்டி ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாகபட்டினம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு ராமேஸ்வரம், திருவண்ணாமலை, வேளாங்கண்ணி பகுதிகளில் வசிப்போருக்குத் தடுப்பூசிகள் போடும் பணியைத் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  விரைவில் அனைத்து புனித நகரங்கள், சுற்றுலாத் தலங்கள், ஆகியவற்றிலும் இந்த பணி தொடங்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.