அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில்,  திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டம்.

72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய(தற்போது கோயில் அமைந்துள்ள இடமான) திருப்புல்லாணி காட்டில், பெருமாளைவேண்டிக் கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகமகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார்.

அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாகக் காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம்.

பிற்காலத்தில் தாயார் பத்மாசினிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்.

சீதையை மீட்க இலங்கை சென்ற இராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக, சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு இராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பைப்புல் விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. இலட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், இலட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை மனைவியருக்குக் கொடுத்தார். அதை பருகிய தசரத பத்தினியருக்கு குழந்தைகள் (இராம சகோதரர்கள்) பிறந்தனர். இதன் அடிப்படையில், இராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோயிலுக்கு வந்து, நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசம் இருக்கவேண்டும். பின் ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை, தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்த இடம். தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோயிலில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக கூறப்படுகிற) அரசமரம் உள்ளது.

இராமர், இலங்கை செல்லப் பாலம் அமைத்ததால் இத்தலம் மிகவும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றி பாடியுள்ளனர்.

பூரி தலத்தில் பாதியளவே(சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் “தட்சிண ஜெகந்நாதம்” என்று அழைக்கப்படுகிறது. ஆதிஜெகந்நாதர்(அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர்(நின்ற கோலம்), அரசமரப் பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்திக் காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். புராதனமான கோயில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு இது. நரசிம்மரின் இந்த தரிசனம் விசேஷமானது. தவிர, ஜெகந்நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுகிறார்கள்.

இராமர், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டியபோது, கடல் அரசன் முதலில் அவர் முன் தோன்றவில்லை. எனவே, இராமர் கடல் மீது பாணம் எய்ய முயன்றார். இதனால் பயந்துபோன கடலரசனான சமுத்திரராஜன், மனைவி சமுத்திர ராணியுடன் தோன்றி அவரை சரணடைந்தான். இவர்கள் இருவரும் சயனராமர் சன்னதி முன்மண்டபத்தில் இருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக்கிறார். ககன், சாரணன் என இரண்டு தூதர்களை இராவணன் இங்கு அனுப்பி ராமனை வேவு பார்க்கச் சொன்னான். இராமனைக் கண்டதும் அவர்கள் அவரைச் சரணடைந்தனர். மூலஸ்தானத்திற்குள் ராமர் பாதத்தின் அருகில் வணங்கியபடி இவர்கள் இருக்கின்றனர்.

திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. இராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்லப் பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள கடல், “ரத்னாகர தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. சித்திரை, பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சுவாமி இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். அமாவாசை நாட்களில் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.

பொதுவாகப் பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி)காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில், “மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரச மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சன்னதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.

சீதையை மீட்டு இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த இராமர், இங்கு சுவாமியைத் தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, இலட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சன்னதியில் காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் இவருக்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

இத்தலம் வந்த இராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். இராமன், அந்த பாணத்தை பிரயோகித்து இராவணனை அழித்தார். இதன் அடிப்படையில் எச்செயலையும் துவங்கும்முன்பு, ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த சுவாமிக்கு, “வெற்றி பெருமாள்” என்றும் பெயருண்டு. இராமர் வழிபட்டதால் இவர் “பெரிய பெருமாள்” என்றும் பெயர் பெறுகிறார்.

சங்கீத மூர்த்திகளான தியாகராஜர், முத்துச்சாமி ஆகியோர் இத்தலத்து சுவாமி பற்றி கீர்த்தனைகள் பாடியுள்ளனர். அரிச்சந்திர புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம் கோயில் எதிரே உள்ளது. காசி, இராமேஸ்வர தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்கள் சேதுக்கரையில் தீர்த்த நீராடி யாத்திரையை முடிக்கின்றனர். இராமனை உபசரித்த பரத்வாஜர், இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார்.
திருவிழா:

ஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், இராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாக்களில் ஜெகந்நாதர், இராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளுவர். ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ராபவுர்ணமியன்று இராமபிரானும் தேரில் எழுந்தருளுவர்.

திருவிழா

பங்குனி மாதம். இராமர் ஜெயந்தி திருவிழா – சித்திரை மாதம். இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி.

பிரார்த்தனை:

பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

தாயாருக்குப் புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

வழிகாட்டி:

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : இராமநாதபுரம் 10 கி.மீ., இராமேஸ்வரம் – 75 கி.மீ., இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் இருந்து இராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு வசதியாக உள்ள ரயில் போக்குவரத்து வசதி இராமநாதபுரத்திற்கு வருவதற்கு எளிதாக உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : இராமநாதபுரம்.

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.

தங்கும் வசதி : ராமநாதபுரம்