திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா கூட்ரோட் இடையே 3174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்பட கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை 2 ம் தேதி முதல் மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வடஆழப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, நெடுங்கல், வீரம்பாக்கம் மற்றும் தேத்துரை ஆகிய 9 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திடீரென நேற்று உத்தரவிட்டார்.

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த விவகாரம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை கைவிடக்கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் கோரிக்கை : அமைச்சர் எ.வ. வேலு தகவல்