சென்னை

கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நேற்று மட்டும் தமிழகத்தில் 14,842 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   நேற்று வரை 10.66 லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 13,475 பேர் உயிரிழந்து தற்போது 1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்,

மாநில அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் பரவல் நாளுக்கு  நாள் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.   அத்துடன் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றாலும் மக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு நாளை அது விசாரணைக்கு வருகிறது.  இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவை குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  நாளை காலை 9.15 மணிக்கு தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது