சென்னை: தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து வலியுறுத்தி இருப்பதாகவும், தமிழக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சமீபத்தில் டெல்லி சென்றார். அங்கு  மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து  மனு கொடுத்து, தங்களது கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்தும்படி வலியுறத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச் சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியதுடன்,  தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும்,  தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தவர், சென்னை- செங்கல்பட்டு வரையிலான 8 வழிச்சாலையை, திண்டிவனம் வரை நீட்டிக்க கோரியிருப்பதாகவும், மாதாவரம் சந்திப்பு- சென்னை வெளிவட்டச்சாலையை ஆறு வழிச்சாலை ஆக மாற்ற  வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், திருச்சி துவாக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் உள்பட 10 திட்டங்கள் குறித்து வலியுறுத்தியுள்ளோம். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் என கூறினார்.