இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு நாளை முதல் பயணச்சீட்டு – போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

Must read

சென்னை:
ரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு நாளை முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினை செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகரப்பேருந்துகளில் பயணிக்க வழங்க கட்டணமில்லா பேருந்து சீட்டு அச்சிடப்பட்டு, ஏற்கனவே கடந்த மாதம் 21ம் தேதி முதல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதைத்தொடர்ந்து, நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு நாளை முதல் இலவச பயண சீட்டு வழங்க போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த வழித்தடத்தில், எந்தெந்த பிரிவில், எத்தனை பேர் பயணித்தனர் என்ற, கணக்கை பெறும் வகையில் இந்த சீட்டு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

More articles

Latest article