சென்னை:
நாளை காலை 10 மணியளவில் முதலமைச்சரே தலைமை செயலகத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளையும், வாக்குறுதிகளையும் வெளியிட்டிருந்தார்.

மேலும், தேர்தல் பிரச்சாரமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு, மனுக்களை வாங்கினார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தலைப்பில் இந்த மனுக்கள் பெறப்பட்டன.

சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் தமிழகம் முழுவதும் தற்போது பரிசீலிக்கப்பட்டு, அந்த குறைகளை நிவர்த்தி செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாளை காலை பத்து மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில், தமிழக முதலமைச்சர் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.