சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை  சார்பில், இதுவரை காணாமல் போன சிலைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி,  கடந்த 25 ஆண்டுகளில் 1204 சிலைகள்  தமிழக கோவில்களில் இருந்து  திருட்டு போயிருப்பதாகவும், அதில்  இதுவரை 56 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக ஐஜி பொன்மாணிக்க வேல் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறார்.

இது தொடர்பான வழக்கு  நீதிபதி மகாதேவன் முன்பு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலைய துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 1992 முதல் 2017 வரை 387 கோவில்களில் ஆயிரத்து 204 சிலைகள் திருடப்பட்டதாகவும், அவற்றில் 56 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 18 சிலைகள் சிலைக்களுக்கு உரிய கோவில்களில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  தமிழகத்தில் 11 ஆயிரம் கோவில்கள் இருப்பதாகவும், அங்குள்ள  சிலைகள், நகைகளை பாதுகாக்க அலார வசதியுடன் தனி அறைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும்,  கோவில்களில் சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஐ.ஐ.டி.யின் கருத்துக்கள் கோரப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.