சென்னை:

துாத்துக்குடி மாவட்டத்தில், காவல் நிலையத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் சூமோட்டோ (தானாக வழக்கு பதிந்து விசாரணை நடத்துவது) வழக்காக எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள, தட்டார்மடம் காவல் நிலையத்துக்கு, முதல் தகவல் அறிக்கை பெறுவதற்காக, வழக்கறிஞர் பெரியசாமி சென்றுள்ளார். அவரை,  உதவி ஆய்வாளர் சுந்தரம், அவதுாறாக பேசி, தாக்கி, சட்டவிரோத காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தான் தாக்கப்பட்டது குறித்து செல்பி எடுத்துக்கொள்வதாக வழக்குரைஞர் பெரியசாமி கூற, நானும் நிற்கிறேன் எடுத்துக்கோ என்று உதவி ஆய்வாளர் சுந்தரம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த செல்பி படம், சமூகவலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் இது குறித்து  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜிக்கு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர், மோகனகிருஷ்ணன், கடிதம் அனுப்பினார்.

தலைமை நீதிபதி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், வழக்கறிஞர், மோகனகிருஷ்ணன், நேற்று ஆஜராகி, சம்பவம் குறித்து விவரித்தார்.

தாக்கப்பட்ட வழக்கறிஞரின் புகைப்படங்களையும் காட்டினார். இதையடுத்து, ‘இதுபோன்ற விஷயங்களை பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று தெரிவித்த தலைமை நீதிபதி, ‘இது குறித்து, நீதிமன்றமே வழக்கை விசாரணைக்கு எடுக்கும்’ என்று தெரிவித்தார்.