சென்னை

சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்டப் பணிகளின் அறிவிப்பும் வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மொத்தம் 9 ஒப்பந்தப் புள்ளி அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தது.   அதில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகளில் லைன் 3 லிருந்து லைன் 5 க்கான வடிவமைப்பு மற்றும்  வரைபடத்தின் படியான திட்டங்கள் குறித்த பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கேட்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்டப் பணிகள் உட்பட அனைத்து தடங்களுக்குமான வரைபடம் வெளியிடப்பட்டது.

 

இதில் லைன் 1 எனப்படுவது விமான நிலையம் – விம்கோ நகர் ஆகும்

லைன் 2 என்பது பரங்கி மலை – சென்னை செண்டிரல் ஆகும்

தற்போது லைன் 3 என அமைக்கப்பட உள்ள 45.81 கிமீ தூரமுள்ள பாதையில் 50 ரெயில் நிலையங்கள் வர உள்ளன.   இது பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.   இந்த தடம் மாதவரம் பால் பண்ணையில் இருந்து மூலக்கடை, பெரம்பூர் அயனாவரம் புரசைவாக்கம் நுங்கம்பாக்கம்,  மைலாப்பூர், அடயார், திருவான்மியூர், துறைப்பாக்கம், சோழிங்க நல்லூர் வழியாக சிறு சேரி வரை செல்லுகிறது.

லைன் 4 என நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள 17.12 கிமீ தூரமுள்ள பாதையில் 20 ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.   இது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கலங்கரை விளக்கம் செல்ல உள்ளது.   கலங்கரை விளக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம், கச்சேரி ரோடு மைலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை, நந்தனம், பனகல் பார்க், வடபழனி,  ஆவிச்சி பள்ளி, சாய் நகர், வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரை செல்கிறது.

லைன் 5 எனப்படும் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள 44.46 கிமீ தூரமுள்ள பாதையில் 46 நிலையங்க்ள் அமைய உள்ளன.  இது மாதவரம் பால் பண்ணையில் இருந்து மஞ்சம்பாக்கம், ரெட்டெரி, கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு பேருந்து நிலையம், நெற்குன்றம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், ராமாபுரம்,  சென்னை வர்த்தக மையம், ஆதம்பாக்கம் கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், எல்காட் வழியாக சோழிங்க நல்லூர் வரை செல்கிறது.

இவை அமைக்கப்பட்ட பின் சென்னை நகர் முழுவதுமே மெட்ரோவால் இணைக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.