பேராசிரியர் ராஜ்மோகன்   – பகுதி-2

மீத்தேன் வாயுவின் உருகு நிலை மைனஸ் – 182.5 டிகிரி செல்சியஸ், அதன் கொதி நிலை என்பதும் மைனஸ் – 161.6 டிகிரி செல்சியஸ். அதாவது உலகின் மிக இயல்பு நிலையில் கூட (ரஷ்யா, அலாஸ்கா போன்ற பனி படர்ந்த இடங்களிலும் கூட) இது வாயு நிலையிலேயே இருக்கும். எந்நேரமும் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது என்பதும் இயற்கையான பச்சை உண்மை. தூந்திரப் பகுதியிலும் கூட இது நீருடன் கலந்து திட நிலையாக இருக்கின்றது. அவ்வளவுதான்.

மாசுபடும் நிலம்:

குறிப்பாக, நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது. மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விடப் பன்மடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும், குளங்களிலும் கலக்கும்போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.

மீத்தேன் எடுக்கும்போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழிகளில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள்அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில் கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.

மீத்தேன் என்றால் என்ன:

கரிம நீரதை எனப்படும் Hydrocarbon வகையினைச் சார்ந்த மூலக் கூற்றினைக் (Molecular Formula) கொண்டதாக அறியப்படுவதே இந்த மீத்தேன் அல்லது மெத்தேன் எனப்படும் எரிவாயு. அத்துடன் மீத்தேன் என்பது எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு – அதாவது அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீப்பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனை ஆங்கிலத்தில் – Highly inflammable, Lower flash point என்பர்.

அப்படிக் கலந்தால் தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும்.

நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாகத் தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நமது வழிபாட்டுத் தலங்கள், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சரித்திர சின்னங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும் ஆபத்துக்குளாகும்.

மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் உள்ளூரில் வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள்இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள்.

தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.

இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது, சாலை அமைப்பது போன்ற பணிகளைச் செய்யும்போது ஏற்கனவே விவசாயம் செய்ய நமக்கு இருக்கும் கட்டமைப்புக்களான ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால் அழிக்கப்படும்.

இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல, இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம் மீது தவறுதலாகத் தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.

நம் நாட்டில் மண்ணிற்குக் கீழ் பதிக்கும் குழாய்கள் எளிதில் இயற்கை வேதியல் மாற்றத்தால் துருப் பிடிப்பது, அரிப்பெடுப்பது ஆகையால் விரைவாக நடந்தேறும். சாலைகளைப் பராமரிக்கும் நமது நாட்டின் லட்சணம் நமக்குத் தெரியும். மேலும் மிகக் கூடுதல் ஆழத்திலிருந்து இறைக்கப்படும் நீர் அங்கு உள்ள நிலக்கரிப் படிவங்களையும் சேர்த்து இழுத்து வெளிக்கொணரும். சோடியம் போன்ற உவர் நிலைத் தாதுக்கள் மிகுதியாக வெளியேறும்போது அது நிலத்தின் அடியில் நிலத்தின் தன்மையினை மாற்றிவிடும். இவ்வகை இயற்கை மாற்றம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்நாளும் பயன் தாராது.

நாம் மீண்டும் அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு செல்லவும் முடியாது. சரி வெளியேற்றப்பட்ட உவர் நீர் வெளியில் மேற்பரப்பில் உள்ள நிலத்தை அடியோடு அழிக்கும். இந்த நிலையும் வந்து விட்டால் மண்ணில் விதை போட்டால் நச்சு கூட விளையாது. மண் முழுவதும் நச்சு தான். பிறகு மீத்தேன் வாயுவிற்கு நிலத்தைத் கொடுத்த மக்கள் சொந்த நிலத்தில் கூட அகதி நிலையில் வாழ முடியாது. பின்பு வெளி மாநிலங்களில் சாலையோர வாழ்க்கை தான்.

இது மிகையல்ல. நிலமற்றவர்களின் நிலை இதுதான். அகதிகள் ஆவதற்கும் ஒரு தகுதி வரையறை உண்டு. அது தஞ்சை மாவட்ட மக்களுக்கு வருமா? மீத்தேன் வாயுவினைக் குழாய்களில் அடைத்துக் கொண்டு செல்வதும் கடினம். இது இரும்புக் குழாய்களை எளிதில் துருப்பிடிக்கச் செய்துவிடும். இதனை அவ்வப்போது ஆய்விற்கு உட்படுத்திப் புதுப்பிக்க வேண்டும்.

இயற்கை வளம் கொள்ளையடிக்க அரசு உடந்தை:

ஒரு கிணற்றிலிருந்து மீத்தேன் எடுக்க 400 லாரி மணலும், 400 டேங்கர் லாரி நீரும் தேவை. ஒரு கிணற்றுக்கு 5 நாட்கள் மீதேன் உறிஞ்ஜி எடுக்க 5 கோடியே 66 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படும். 50 கிணறுகளுக்கு 263 கோடி லிட்டர் நீர் தேவைப்படும். எதிர்காலத்தில் 2000 மீதேன் கிணறுகள் வரவுள்ளன. அப்படியெனில் எவ்வளவு நீர் பயன்படுத்தப்படும் என்பதை கணக்கீட்டுக் கொள்ளுங்கள். மேட்டூர் அணையின் மொத்த நீரையும் இந்தக் கிணறுகள் நான்கே மாதங்களில் தீர்த்துவிடும். எனவே இந்தத் திட்ட்த்திற்கு மொத்த தமிழகத்தின் தண்ணீரையும் நாம் தாரை வார்க்கப் போகின்றோம். விரைவில் தமிழகம் வறண்ட பாலைவனமாகும் என்றால் அது மிகையல்ல.

80 லட்சம் வீடுகள் கட்ட பயன்படும் அளவு மணல், மீத்தேன் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். நம் எதிர்கால சந்ததிகள் குடிக்க நீருமின்றி குடியிருக்க வீடும்இன்றி வேறு இடங்களுக்கு அகதிகளாய் வெளியேறவேண்டியது தான்.

மொத்தம் 691 சதுர கி.மீ வேளாண் நிலத்தில் 2000 குழாய்கள்வரை அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் என்னும் தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு போட்டது. குறைந்தபட்சம் 6 லட்சம் கோடி மதிப்புள்ள எரிவாயுவை, 50,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து, தமிழகத்தின் வேளாண் தற்சார்பை ஒழித்து நமது மண்ணின் வளத்தைப் பெருமுதலாளிகள் சூறையாட, நமது அரசே ஒப்பந்தம் போட்டது.

மீத்தேன் எடுக்கும் அபாயகரமான திட்டத்தை எதிர்த்து இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் காவிரிப் படுகையில் கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்து இத்திட்டத்தின் கொடிய விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். மண்ணையும் மக்களையும் காக்க, தனது இறுதி மூச்சு வரை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்றிணைத்து களத்திலேயே தனது உயிரையும் துறந்தார் நம்மாழ்வார்.

இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, மீத்தேன் எரிவாயு எடுக்கத் தனியார் நிறுவனத்துக்கு அளித்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதன் பிறகு திட்டத்தின் நிலைகுறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை.

ஷெல் (சிபிஎம்-நிலக்கரி படுகை எரிவாயு) திட்டத்தைப் பொருத்தவரை, தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, ஓஐஎல் ஆகியவை மூலம் வளங்களை ஆய்வு செய்யச் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த ஆய்வு தற்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

மீத்தேன் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்” கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு, திட்டத்தைக் கொண்டுவர காரணமாக இருந்த முன்னாள் துணை முதல்வர் மு.க ஸ்டாலின் மார்க் 2 2014ல், திருவாரூரில், விவசாயிகளிடம் மன்னிப்பு கோரினார். அவர் “இந்தத் திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தெரியாமல் 2011-ல் ஒப்பந்தம் போட்டுவிட்டேன். இதற்கு ஒப்புதல் கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசு தான்” எனக் கூறினார்.

தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு உத்தேசித்திருந்தது. ஆனால் இந்தத் திட்டத்தால் வேளாண் விளை நிலங்களில் நிலத்தடி நீர் வெளியேறும் என்றும் அதன் விளைவாகப் பிற பகுதிகளில் வேளாண் சாகுபடி பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ONGC க்கு எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என்று தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான், நவம்பர் 2016ல் தெரிவித்தார்

(தொடரும்)