சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க மத்தியஅரசு உரிய நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும்  என வி.கே.சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
தான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என கூறி வரும் வி.கே.சசிகலா, தற்போது தன்னை புரட்சித்தாய் என்றும் தனது ஆதரவாளர்கள் மூலம் அழைத்து புளங்காகிதம் அடைந்து வருகிறார். அதிமுகவை மீட்டெடுக்கப்போவதாக கூறி, அதிமுகவில் குழந்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீப நாட்களாக மத்திய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கைகளை தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில்,  இன்று மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை மீட்க, மத்திய அரசு உரிய வெள்ள நிவாரணத் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரது அறிக்கையில்,  வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளிலிருந்து மீண்டு வர மத்திய அரசு, உரிய நிவாரண தொகையை, தமிழகத்திற்கு உடனே வழங்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவித்து உள்ளார்.

கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது – ஒரு சில மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் எண்ணிலடங்காது – முக்கியமாக, இதில் பல மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன – மக்கள் தங்களின் வீடு, உடைமைகள், தங்கள் வீட்டில் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் போன்ற உயிரினங்களையும் இழந்து, வாழ வழியின்றி, நிர்கதியாய் நிற்கிறார்கள் என்றும் சின்னம்மா வேதனை தெரிவித்துள்ளார். அதேபோன்று, விவசாயிகள், தங்கள் விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்து, சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து செய்வதறியாது பரிதவிக்கிறார்கள் என்றும்  தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களும், வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளன – பல இடங்களில் ஏழை எளிய மக்கள், தங்கள் வாழுகின்ற குடிசை வீடுகளில் கழிவு நீர் கலந்த மழை நீர் தேங்கிய நிலையில், வாழ வழியின்றி மிகவும் துன்பப்படுகிறார்கள்.

தமிழகத்தில் பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன – குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர் – மேலும், காமராஜபுரம் பகுதியில் பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக, 14 வீடுகள் வெள்ளத்தால் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டதாகவும், பல வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது.

மேலும், இந்த மழையின் காரணமாக, தமிழகத்தில் குடிசை மற்றும் மண் சுவர் வீடு இடிந்து, வாழ வழியின்றி தவிப்பவர்களுக்கு, கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்து, அவர்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தமிழக அரசு உடனே செயல்படவேண்டும்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன – குறுவை நெற்பயிர்கள் சாகுபடி செய்தவர்கள், முழுமையாக அறுவடை செய்யாமல் இருந்த நிலையில், வெள்ள நீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது – அதேபோன்று, சம்பா, தாளடி போன்றவை பயிரிடப்பட்டு, உரங்கள் போடப்பட்டு இருந்த நிலையில் அனைத்து பயிர்களும் வீணாகிவிட்டன – இதன் காரணமாக, நெற்பயிர்களை இழந்து நிற்கும் விவசாயிகள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடு செய்யும் விதமாக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் .

மேலும், பல்வேறு பகுதிகளில் சிறு குறு விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வாழை, வெற்றிலை, மலர்கள், கரும்பு, வெங்காயம், முட்டைகோஸ், கிழங்கு வகைகள், கேரட் போன்ற பயிர்களும் சேதம் அடைந்து இருக்கிறது – இதுபோன்று, மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள அனைத்துவித வேளாண் பயிர்களுக்கும் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும்,  நீர்நிலைகளில் பல இடங்களில் அணைக்கட்டுகள் உடைந்து காணப்படுகின்றன – அதேபோன்று பல மாவட்டங்களில் தரைப்பாலங்கள் சேதம் அடைந்து வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன –

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து பாதிப்புக்குள்ளாகி போக்குவரத்து இல்லாமல் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் நெற்பயிர்களும், துவரை, உளுந்து, கம்பு, கேழ்வரகு, மணிலா போன்ற சிறுதானிய பயிர்களும் சேதமடைந்துள்ளன .

திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தென்னை மரங்கள் மற்றும் தக்காளி, மிளகாய் சாகுபடி செய்த விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி பயிர்கள் வீணாகி இருப்பதாகவும்

அரியலூர், பெரம்பலூர், நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோழிப்பண்ணைகளில் மழைநீர் சூழ்ந்து எண்ணற்ற கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக தெரிகிறது

ஒருசில மாவட்டங்களில் பாய் தயாரிப்பு, மண்மாண்ட தொழில்கள் மற்றும் விசைத்தறி தொழில்கள் இந்த மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ளன.

தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர் –

தேனி, கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள திராட்சை, பாதியளவுக்குமேல் நீரில் அழுகி சேதமடைந்துள்ளது –

கடலூர் மாநகராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது –

மீனவ மக்களும் கடலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால், மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக அனைத்து மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளதாகவும்

 ஆகையால், மத்திய அரசு, தமிழகத்தில் இந்த மழையால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முழுமையாக ஆய்வு செய்து, தமிழக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புவதற்கு ஏதுவாக, உரிய நிவாரணத் தொகையை உடனே வழங்குமாறு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.