ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுத்தால்…..: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Must read

சென்னை:

ராகுல் நிகழ்ச்சியை நடத்திய  ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுத்தால் தமிழக கடுமையான விளைவுகளை சந்திக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவல் கே.எஸ்.அழகிரி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 13ந்தேதி சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, அன்றைய தினம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதனால் கடுப்பான மத்திய மாநில அரசுகள், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது யார் என்று கேள்வி எழுப்பி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழகஅரசின் நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசியல் தலைவர்கள் கல்லூரிகளில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுவது நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கல்லூரி சங்க தொடக்க விழா, ஆண்டு விழா, தமிழ்ப் பேரவை விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரசியல் தலைவர்கள் உரை நிகழ்த்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் சங்கத்தின் அழைப்பை ஏற்று ராகுல்காந்தி பங்கேற்று அவர்களோடு கலந்துரையாடியது நாட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

ராகுல்காந்தி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு மிக அற்புதமாக பதிலுரை வழங்கியது ஊடகங்கள் மூலமாக வெளிவந்ததை ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பி பார்த்திருக்கிறார்கள்.

இதை சகித்துக் கொள்ள முடியாத மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கிற அ.தி.மு.க. அரசின் மூலமாக நிகழ்ச்சி நடத்திய ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிர்வாகத்தின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றது எந்த அடிப்படையில் என்று விளக்கம் கோரி அறிக்கை அனுப்பும்படி கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குநர் தாக்கீது அனுப்பியுள்ளார். ராகுல்காந்தியை அழைப்பது என்கிற முடிவு ஒருசில மாதங்களுக்கு முன்பே கல்லூரி மாணவிகள் சங்கம் எடுத்ததாகும்.

அந்த அடிப்படையில் அவர் சென்னை வருகிற போது அந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி ராகுல்காந்தி அழைக்கப்பட்டு கடந்த 13 ஆம் தேதி பகல் 12 மணியளவில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அழைக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில் தான் அழைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இல்லை.

ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது தேர்தல் நடத்தை விதிமுறைளை மீறிய செயலா என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அவர்களிடம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 13.3.2019 அன்று மாலையே கேட்கப்பட்டது. அதற்கு அவர்  இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ராகுல்காந்தி கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை, முன் அனுமதி பெற்று நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே இதில் எந்த தேர்தல் நடத்தை விதிமீறலும் இல்லை என்று கூறிவிட்டபிறகு கல்லூரி கல்வி இயக்குநர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது

கல்லூரி கல்வி இயக்குநர் அ.தி.மு.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்டு இத்தகைய பழி வாங்கும் நடவடிக்கைக்கு துணை போனால் அதற்குரிய விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக கூற விரும்புகிறேன்.

பொதுவாக, கல்லூரியில் நடைபெறுகிற விழாக்களில் அரசியல் தலைவர்கள் எந்த அடிப்படையில் பங்கேற்று உரை நிகழ்த்துவார்களோ, அதைப் போல தான் ராகுல்காந்தியும் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அழைக்கப்பட்டு சிறப்புரையாற்றினார். இதில் ஆட்சேபனை செய்வதற்கு தமிழக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

இத்தகைய தேவையற்ற நடவடிக்கையின் மூலம் ராகுல்காந்தியின் செயல்பாட்டில் குந்தகம் விளைவித்து விட முடியும் என்று மத்திய – மாநில அரசுகள் கருதுமேயானால் அது பகல் கனவாகத் தான் முடியும்.

புகழ் பெற்ற ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு முன்வருமே யானால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எச்சரிக்க விரும்புகிறேன். எனவே, பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குநர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பியிருக்கிற நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article