திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று முதல்வர்  பினராயி விஜயன், வரும் 20ந்தேதி 2வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்கிறார். அவருடன் மேலும் 20 அமைச்சர்களும் அன்றைய தினம் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.,

கடந்த ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று முடிந்த கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்றது. இதில்,  ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது.

பொதுவாக கேரள மக்கள்  ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள். ஆனால், இந்த முறை அந்தடிரெண்ட் தகர்ந்தெறியப்பட்டு, மீண்டும் கம்யூனிஸ்டு கட்சியையே மக்கள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இதையடுத்து, இன்று  இடது ஜனநாயக முன்னணியின் அமைச்சரவை குறித்து ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த விஜயராகவன்,  மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை இடம்பெறும்  என்றும்  கொரோனா சூழல் காரணமாக குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையுடன் மே 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்ற கூறினார்.

புதிய அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத் தலா 1 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 இடங்கள் சுழற்சி முறையில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனப்டி, மீதமுள்ள 2 இடங்கறிளல், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஜனாதிபத்ய கேரள காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சிகளும், அதன்பிறகு கேரள காங்கிரஸ் (பி) மற்றும் காங்கிரஸ் (எஸ்) அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்தவர் பேரவைத் தலைவர் பொறுப்பை வகிப்பார். பேரவை துணைத் தலைவர் பொறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமைக் கொறடா பொறுப்பு கேரள காங்கிரஸ் (எம்)-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான இலாகாக்களை முடிவு செய்யும் அதிகாரத்தை இடது ஜனநாயக முன்னணி முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.