சென்னை: தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நிலுவையில் இருந்த  10 மசோதாக்களை  ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுத்து வருகிறார். கருத்தியல் மோதலாக தொடர்ந்தர இந்த மோதல், தற்போது,  தனிப்பட்ட விமர்சனங்களாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மனுவில்,  மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டதுடன், மாநிலஅரசின்  மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

அத்துடன், மிகவும் அவசியமான விவகாரங்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது. தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் ஆளுநர் துஷ்பிரயேகம் செய்கிறார் என்பதாக மாறுகிறது என்றும், தமிழக மக்களின் உரிமைகளை ஆளுநர் பறிக்கிறார். ஆளுநரின் செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையே முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி உள்ளது. அத்துடன்,  முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஆளுநர் தடையாக இருக்கிறார். சிபிஐ விசாரணை உள்ளிட்டவற்றிற்கு உத்தரவிட மறுக்கிறார் என்று குற்றம் சாட்டி உள்ளதுடன்,  டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன பரிந்துரையை முறையான விளக்கமின்றி நிராகரித்திருக் கிறார், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் மெத்தன போக்கை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது எனப்தையும் சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் எப்போது தாக்கல் செய்யப்பட்டது என்றும் எவ்வளவு நாட்கள் நிலுவையில் உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு 2020 ஆம் ஆண்டு முதல் மசோதாக்கள் கிடப்பில் இருப்பதாகவும், as soon as possible என்ற வாக்கியத்தை ஆளுநர் தவறாக புரிந்து கொண்டு செயல்படுவதாகவும் அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், தமிழ்நாடு அரசு எழுப்பிய பிரச்னைகள் கவலைக்குரியது என்று கருத்து தெரிவித்தனர். அரசியல் சாசனம் 200ஆவது பிரிவின் கீழ், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட உடன், உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், பல ஆண்டுளாக நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அதுதொடர்பான  விளக்கம் கேட்டுள்ளார்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விவரம்:-

1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,

2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா

3) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

4) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா

6) தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா

9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள் விவரம்:

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியும் 12 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் காத்திருக்கின்றன.  அவற்றில் 2020 ஆம்ஆண்டு ஜனவரி அனுப்பிய மசோதாவும் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1. 2020 ஜனவரி 12, தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக திருத்த மசோதா 2012

2. 2020 ஜனவரி 18, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா 1989

3. 2022 ஏப்ரல் 10, தஞ்சை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரனுக்கு எதிராக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் கோப்பு

4. 2022 ஏப்ரல் 25, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

5. 2022 ஏப்ரல் 28, சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

6. 2022 ஏப்ரல் 28, சட்டப்பேரவையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் நேச்சரோபதி, ஹோமியோபதி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா

7. 2022 மே 16, டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மசோதா

8. 1996ல் திருத்தத்திற்கான ஒப்புதல்

9. 2022 மே 16, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 1987ல் திருத்தம் செய்யும் மசோதா

10. 2022 மே 16, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டம் 1971ல் திருத்தம் செய்யும் மசோதா

11. 2022 செப்டம்பர் 12, முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, B.V.ரமணா சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரிய கோப்புகள்

12. 2022 அக்டோபர் 27, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்யும் மசோதா

நீண்டகாலமாக சிறையில் உள்ள 49 பேர் விடுதலை தொடர்பாக, அனுப்பப்பட்ட தமிழக அரசின் அரசாணை

மேலும்,

  • மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா.
  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.
  • தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்திவைப்பதற்கான மசோதா.
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல்.
  • தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் மசோதா.

ஆகிய மசோதாக்கள்  ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கிறது.

,ஆனால், தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்துள்ள 12 மசோதாக்கள் குறித்து கருத்து தெரிவித்து,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் இதில் 12 மசோதாக்கள் தமிழகத்தில் உள்ள 12 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக உள்ள ஆளுநரை நீக்கிவிட்டு தமிழக முதல்வரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற மசோதாவாகும். இந்த மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஏனென்றால் கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது என்றும்,  உயர்கல்வியின் தரம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பல்கலைக்கழகங்களில் வேந்தரான ஆளுநரை நீக்கிவிட்டு, தமிழக முதல்வரை நியமிப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவேதான் ஆளுநர் இந்த 12 சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். 13வது மசோதா சித்தா பல்கலைக்கழகத்திற்கு தனி நுழைத்தேர்வு நடத்துவது என்பதாகும். இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. இதை ஏன் தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடவில்லை’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.