சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், வரும் 18ந்தேதி  சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு தரப்பில், ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி உள்ளார்.  ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள பெரும்பாலான மசோதாக்கள் பல்கலைக்கழகங்கள் தொடர்புடையவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இது சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிலையில்,  மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி, அதே மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது. இரண்டாவது முறையாக ஒரு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு செல்லும் பட்சத்தில், அதற்கு அரசியல் சாசனத்தின்படி  ஆளுநர்  ஒப்புதல் வழங்க வேண்டியது தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், தமிழ்நாடு அரசு  வரும் சனிக்கிழமை (18ந்தேதி)  சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட  முடிவு எடுத்துள்ளது.

நீட் விவகாரத்தில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டது போலவே தற்போது மீண்டும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு எதிரொலி: 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…