கான்பூர்,
ரு துணை ஆய்வாளர் பலாத்கார வழக்கில் தமக்கு கொரோனா எனப் பொய் கூறி உள்ளார்.

மாதிரி புகைப்படம்

சின்ன வயதில் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடக் காய்ச்சலை இழுத்து  ’லீவ் லெட்டர்’ கொடுக்காத மாணவர்கள் அரிதினும் அரிது.

’நொண்டிச்சாக்கு’ சொல்ல இப்போது கொரோனா கிடைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள சாகேரி காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராம் சேவக்.

ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக வேறு ஒருவர் மீது அந்த பெண்ணின் குடும்பத்தார் , அந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்   ராம் சேவக், குற்றவாளியைக் கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலமும் வாங்கவில்லை.  பெண்ணின் பெற்றோர் போலீஸ் நிலையத்துக்கு நடையாய் நடந்தது தான் மிச்சம். எப்போதும் ஏதாவது ஒரு நொண்டி சாக்கு சொல்லி அவர்களை அலைக்கழித்து வந்தார்.

சமூக ஊழியர் ஒருவர், அந்த சப்-இன்ஸ்பெக்டரை  தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு’’ அந்த பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்?’’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் அளித்த பதிலை அந்த ஊழியர் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரவ விட, சப்-இன்ஸ்பெக்டரின் பதில் வைராலாக பரவி-ஒரு பிரளயத்தையே உண்டாக்கி விட்டது.

அவர் சொன்ன பதில் என்ன?

இதுதான்:

‘’நான் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் உயிர் பிழைத்து வந்தால் அந்த பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறேன். நான் இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறேன்.அந்த அனுமான் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்’’  என்று அவர் சொல்லியுள்ளார்.

உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி.

விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் கூறியது அண்டப்புளுகு என்று தெரியவந்தது.

‘’சும்மா ஜோக் அடித்தேன்’’ என அவர், உயர் அதிகாரிகளிடம் சமாளித்துள்ளார்.

விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது  காவல்துறை.

– ஏழ்மலை வெங்கடேசன்