சென்னை: மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து; உயர்கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதே இலக்கு என்று சென்னை தனியர் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தொடக்க விழா இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் உன் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள்  மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கிய நவீன உபகரணங்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.  தொடர்ந்து சிறந்த  மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசினை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து. அவர்களுக்கான கல்விக்கதவுகள் மூடப்படக்கூடாது கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயர், ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும்”

நீட் தேர்வில் விலக்கு பெற சட்டப்போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாக கூறினார். மேலும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறை உருவாக்கப்பட்டது எனக்கூறியதுடன்,  கல்வி கற்கும் காலத்திலேயே சமுதாய தேவையறிந்து, படைப்பாற்றலை கண்டறியும் மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்க திட்டம் உதவும் என குறிப்பிட்டார்.

கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பட்டம் போதாது என தெரிவித்த அவர், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறந்தது தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பயணிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.