இலங்கை தூதரகம் முற்றுகை: சீமான் கைது!

Must read

சென்னை,

லங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தியது.

கடந்த 6ந்தேதி இரவு ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள்மீது சரமாரியாக சுட்டனர். இதில் கழுத்தில் குண்டுபாய்ந்து பிரிட்ஜோ மரணமடைந்தார்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். துப்பாக்கி சூட்டில் இறந்த பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து உத்தரவாதம் தரக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கொடுஞ்செயல் குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். தொடர்ந்து 7வது நாளாக  போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதையடுத்து, இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கையை தூதரகத்தை முற்றுகை யிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் இலங்கையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தமிழக மீனவர் விவகாரத்தில் மவுனம் காப்பதாகவும், உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதாகை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சீமான் கூறியதாவது,

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது எதிர் பாராமல் நடந்த நிகழ்வு அல்ல. இதுவரை 840  தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக பாராளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சிறிய நாடான இலங்கை எந்தவித பயமுமின்றி தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் என்பது இலங்கை கடற்படையினருக்கும் பொருந்தும் என்றார்.

ஆனால் இலங்கை கடற்படையினர்,  கச்சத்தீவு வரை எல்லைத்தாண்டி வந்து தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறார்கள். ஆனால்,  மத்தியஅரசு இதை கண்டுகொள்வதில்லை என்றும்,

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண  மத்தியஅரசு எந்தவித முயற்சியும், செய்யவில்லை என்றும், மீனவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை  என்றும் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே, தமிழக மீனவர்களின் 138 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதனை மீட்டு கொடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது கண்டனத்திற்குரியது. மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டும். அப்போதுதான் தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article