மும்பை

தாதரில் மும்பையில் வாழும் வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு நேற்று வரை 48.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 72 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதையொட்டி மாநிலம் எங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.  இதுவரை 2.8 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மும்பை நகரில் தாதரில் நேற்று ஒரு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.  இங்குள்ள கோகினூர் பல மாடி வாகன நிறுத்துமிடத்தில் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது.  இது வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக தொடங்கப்பட்டுள்ளது.  இவர்களால் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது என்பதால் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் வயதானோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாகனத்தில் அமர்ந்தபடியே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.  ஊசி போட்டுக் கொண்டவர்கள் தங்கள் வாகனத்தின் உள்ளேயே அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்.  ஊசியால் எவ்வித உடனடி பக்க விளைவும் ஏற்படவில்லை என உறுதி செய்த  பிறகு அவர்கள் அங்கிருந்து அனுப்பப்படுகின்றனர்.  காத்திருக்கும் நேரத்தில் வைரஸ் தாக்குதலை தவிர்க்க இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது.