பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி வருகின்றன.

இதில் ஏராளமானவை உண்மைக்குப் புறம்பாகவும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது.

மத ரீதியிலான, ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் நடவடிக்கை எடுக்கும் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக ஊடகங்கள் இந்தியாவில் மட்டும் அதனை கண்டும் காணாதது போல் விட்டுவிடுகின்றன.

உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இந்த சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் ஆளும் கட்சியினருக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் அவர்களின் வியாபாரத்தை பாதிப்பதாக அமைந்துவிடுகிறது.

மேலும், இந்த பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இணையதள தடை உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை பாஜக அரசு திட்டமிட்டே நடத்துவதாக வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

உலகத் தரமான சாலைகள், உள்கட்டமைப்புகள் என்ற உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடங்கி கனடா விவகாரம் வரை அனைத்திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டு சமூக வலைதளம் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் இருந்தும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி தேவைப்படுவதை அடுத்து இந்தியாவில் அதிகரித்து வரும் எதேச்சதிகாரம் மற்றும் இன மோதல்களை அமெரிக்காவின் பைடன் அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது.

இதனால் கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி சமூக வலைத்தளம் மூலம் AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவிடப்படும் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வு பதிவுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி கட்சிக்கு ஆதரவாக பதிவிட வெளிநபர்களின் உதவியையும் நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் தங்கள் சேவை விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தயக்கம் காட்டுகின்றனர். ஆளும் கட்சிக்கு ஆதரவாக ரகசியமாக இயக்கப்படும் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பேஸ்புக் மூலம் மிகப்பெரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை அந்நிறுவனம் கண்டுபிடித்தது.

இருந்தபோதும் டெல்லியில் உள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் அதனை முடக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் கருத்துக்களையும் நீக்கவேண்டும் என்று அரசிடம் இருந்து சமூக வலைதள நிறுவனங்களுக்கு வைக்கப்படும் கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தவிர, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இணையதளம் முற்றிலும் முடக்கப்படுகிறது.

பிரேசில் போன்ற நாடுகளில் கூட ஆளும் கட்சிக்கு ஆதரவான பதிவுகள் சமூக வலைதளத்தில் அதிகமா உள்ளது என்றாலும் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பல்வேறு விதமான அவதூறுகளை பரப்பப்படுவது போல் இதுவரை வேறு எந்த நாட்டிலும் பார்த்ததில்லை என்று அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸப் மூலம் ஆதாரப்பூர்வமான தகவல்களை பகிர முறையான கட்டமைப்பு ஏதும் இல்லாமல் வரம்புகளை மீறிய தகவல்களை பரப்புவதில் இந்த குழுக்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.