பெங்களூரு

ர்நாடக மாநிலம் சம்ராஜ்நகர்  தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 29 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு வரும் மே 7-ந்தேதி நடைபெற உள்ளது.

நேற்று கர்நாடகாவின் சம்ராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட ஹானூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவின்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது.

அங்குள்ள இண்டிகானத்தா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆயினும் அங்குள்ள மற்றொரு தரப்பினர் வாக்கு செலுத்த மறுப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இந்த மோதலில் வாக்குச்சாவடியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்தது.

இது குறித்து தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், இண்டிகானத்தா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் கடந்த நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு ரத்து செய்யப்படுவதாகவும், அங்கு வரும் 29-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.