டெல்லி: ரஷ்யாவின் ‘ஒற்றை டோஸ்’ கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் லைட்’ இந்தியாவில்  டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே ஸ்புட்னிக் இரண்டு டோஸ் தடுப்பூசி இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள நிலையில், ஒற்றை டோஸ் தடுப்பூசி அடுத்த மாதம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தவும் இந்திய அரசின் மத்திய கட்டுப்பாட்டு  அமைப்பு அனுமதி வழங்கியது. அதன்படி, தனியார் மருத்துவமனைகளில் விருப்பப்படுபவர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் ஒற்றை டோஸ் ஸ்புட்னிக் லைட் கோவிட்-19 தடுப்பூசி  டிசம்பர் 2021க்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் நேற்று (நவம்பர் 24ந்தேதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே   3-ம் கட்ட பிரிட்ஜிங் சோதனைகளை நடத்த டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரி லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (Drugs Controller General of India (DCGI)) செப்டம்பர் மாதம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் ஒற்றை டோஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 ஸ்புட்னிக் லைட் என்பது ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V இன் பாகம்-1 ஆகும், ஏற்கனவே ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு கடந்த  ஏப்ரல் மாதம், அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை  இந்தியாவின் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.