சென்னை: வடசென்னை தண்டையார் பேட்டை அருகே கச்சா எண்ணெயுடன் கழிவு நீர் கலந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதியில்  தொற்றுநோய் மற்றும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனே கச்சா எண்ணை வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டது. பொதுமக்களின் புகாரை அடுத்து சரி செய்யப்பட்டது. இருந்தாலும் பல இடங்களில் நிலத்தடி நீர் மாசுப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலையில்தற்போத மீண்டும் கச்சா எண்ணை கொண்டு செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு, கழிவு நீரில் கச்சா எண்ணை கலந்து, கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி வருகிறது. இந்த சம்பவம்  தண்டையார் பேட்டை நேதாஜி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ளது,  கழிவுநீரில் கச்சா எண்ணெய் கலந்து சாலையில் வெளியேறுவதால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.

சென்னை ஆர்.கே நகர் பகுதிக்கு உட்பட்ட 38 வது வார்டடு நேதாஜி நகர் கழிவுநீருடன் கச்சா எண்ணெய் வெளியேறி கலந்து சாலையில் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் மற்றும் தீ விபத்து ஏற்படும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் எண்ணை கலந்த கழிவுநீர் தேங்கி உள்ளதால், யாராவது சிகரெட் போன்ற ஏதாவது தீப்பற்றும் பொருளை வீசிவிட்டால் கடும் விபத்துக்கான வாய்ப்பு உள்ளது.

இந்த எண்ணை கசிவால், நேதாஜி நகர் மக்கள் பீதியடைந்துள்ளனர்.  அந்த பகுதியில் உள்ள பல சாலைகள் முழுவதுமாக எண்ணெய் படலங்களாக சாலைகள் காட்சி அளிப்பதால்,  குழந்தைகளும் பொதுமக்களும் நடந்து சென்று கூட வர இயலாத நிலை உள்ளது. மேலும் எண்ணை படலமாக காட்சி அளிப்பதால், வாகன ஓட்டிகளும் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியாக செல்லும் நிலை உள்ளது.

சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலத்தின் மண்டல குழு தலைவராக இருக்க கூடிய நேதாஜி.யு.கணேசன் கவுன்சிலராக இருக்கக்கூடிய வார்டில் இது போன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் தீவிர நடவடிக்கை எடுக்காமல் மேம்போக்காக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டும் அப்பகுதி பொதுமக்கள், சில இடங்களில் கச்சா எண்ணெய் குடிநீரில் கலந்து வருவதால் பொதுமக்கள் என்ன செய்வதரியாது என திகைத்து போய் உள்ளதாகவும் அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் மற்றும் குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சுத்தமான குடிநீரும் சுகாதாரமான சாலைகள் அமைத்த தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்காவிட்டால், அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்று புகார் கூறும் மக்கள், இதுதொடர்பாக, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம்  புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.