தருமபுரி:  இடைத்தேர்தல் அவசியம் அற்றது – இடைத்தேர்தலுக்குள் ஈரோடு மக்கள் லட்சாதிபதியாகிவிடுவர் – இரு சக்கர வாகனங்கள் வாங்கி விடுவார்கள் – அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்படும் நிலை உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ள நிலையில்,. அவரை எதிர்த்து, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.  அதுபோல பாமக, பாஜக  போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. மநீம திமுகவுக்கு ஆதரவு என தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திமுக கூட்டணி களப்பணி ஆற்றி வருகிறது. 11அமைச்சர்கள் களமிறக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  தருமபுரியில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர்,  செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது, தருமபுரி மாவட்டத்தில் நீண்ட கால பிரச்சினைகள் பல உள்ளன. அதில் முக்கியமானது குடிநீர் பிரச்சினையும் வேளாண் பிரச்சினையும்தான். இதற்கு தீர்வு தேடத்தேவையில்லை. அருகிலேயே இருக்கிறது. ஒட்டுமொத்த மாவட்ட மக்களுடைய கோரிக்கை ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழகஅரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் பல முறை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதை வலியுறுத்தி பாமகவும் நடைப்பயணத்தை நடத்தியுள்ளது. அது போல் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி அதில் 10 லட்சம் கையெழுத்துகளை பெற்று அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியிருந்தோம்.

இன்றைய முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளார். ஆனால் பதவி ஏற்று 20 மாதங்கள் ஆன நலையிலும், அதுதொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிட வில்லை.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக ஏதோ கடமைக்கு சொல்கிறார். இதுதொடர்பாக அரசு முடிவு எடுக்கவில்லை என்றார்,.  இந்த திட்டத்தை நிறைவேற்றக் கோரி பாமக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தொப்பூர் கணவாய் சாலையை சீரமைக்கக் கோரி சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். இந்த சாலை பிரச்சினை தருமபுரி பிரச்சினை மட்டும் அல் , இது இந்தியாவின் பிரச்சினையாகும். பூரண மதுவிலக்கு குறித்து எங்களுக்கு திமுகவின் கொள்கை என்ன என்பதை விளக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தவர்,

மது சார்ந்த கொள்கை என்ன, பூரண மதுவிலக்கு கொண்டு வருவீர்களா, படிப்படியாக கொண்டு வருவீர்களா, முழுமையாக கொண்டு வருவீர்களா, இல்லை கொண்டு வரவே மாட்டீர்களா என்பதையும்  இந்த அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றவர்,  திமுகவின் நிறுவனர் அண்ணாவின் கொள்கையை நடைமுறைப்படுத்துங்கள். மதுவை ஒழிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கணிசமாக மதுக்கடையை மூடினார்கள். இதற்கு பாமகதான் காரணம் என்றார்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், இடைத்தேர்தல் மீது பாமகவிற்கு நம்பிக்கை இல்லை. இடைத்தேர்தல் அவசியம் அற்றது. இதனால் இடைத்தேர்தலில் கலந்துகொள்வது இல்லை என பாமக கொள்கை முடிவு எடுத்துள்ளது. பாமக கடைசியாக  சந்தித்த இடைத்தேர்தல் பென்னாகரம். அதன் பின்னர் 13 ஆண்டுகளாக பாமக எந்த இடைத்தேர்தலிலும் பங்கேற்வில்லை. இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்பது,   பாமகவின் நிலைப்பாடு நாங்கள் போட்டியிட மாட்டோம். யாருக்கும் ஆதரவும் கிடையாது.

தற்போது, இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இடைத்தேர்தல் முடிவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் இரு சக்கர வாகனங்களை வாங்கி விடுவார்கள். ஒவ்வொரு குடும்பமும் லட்சாதிபதி ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் பைக் வாங்கிவிடுவார்கள். இடைத்தேர்தல் என்றால் திருமங்கலம் ஃபார்முலா பெருக்கல் 10.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும்கட்சி தரப்பில் பல்வேறு சலுகைகள், அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மறைமுகமாக வாங்குகளை பெறும் நோக்கில் பல உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆளும் திமுக அரசுக்கு பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில்,  இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் அங்கு திமுக அமைச்சர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள்.