டில்லி

கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இங்கு கொரோனா தடுப்பூசிக்கு அவசியத் தேவை உள்ளது.  தற்போது சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன.

இதையொட்டி வெளிநாட்டு நிறுவனமான பிஃபைசர் நிறுவனம் முதல் நிறுவனமாக இந்தியாவில் அவசர உதவிக்கு தங்கள் தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி கோரியது.  அதைத் தொடர்ந்து மேலும் இந்திய நிறுவனங்களும் அவசர அனுமதி கோரி விண்ணப்பம் அளித்தன.

இன்று கொரோனா தடுப்பூசி அனுமதி கோரி விண்ணப்பித்த சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனத்தின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.  இந்த செய்தி இந்தியாவில் அதிர்வலையை உண்டாக்கியது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை சீரம் இன்ஸ்டிடியூட் அளித்த கொரோனா தடுப்பூசி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வந்த செய்தி போலியானது எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது.