கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை மத்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11:30 மணிக்கு அறிவிக்கவுள்ளது.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஏற்கனவே கர்நாடகா சென்று ஆய்வு செய்த நிலையில் தேர்தல் அட்டவணையை தயாரித்து, மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

தற்போது நடைபெறும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகிய கட்சிகள் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்க தேவையான வியூகத்தை காங்கிரஸ் கட்சி வகுத்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் 124 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அனைத்து சமுதாய மக்களையும் திருப்திப்படுத்தும் விதமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் சக்தி வாய்ந்த சமூகங்களான கவுடா மற்றும் லிங்காயத்துகளுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கும் கணிசமான இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது பழைய தொகுதியான வருணாவில் போட்டியிடுகிறார், கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுராவிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி மற்றும் அவரது மகள் சௌமியா ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். முறையே BTM லேஅவுட் மற்றும் ஜெயநகரில் இருந்து போட்டியிடுகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூனா தாவணகெரே வடக்கு தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் கே.எச்.முனியப்பா தேவனஹள்ளி தொகுதியிலும், அவரது மகள் ரூபா சசிதர் ரூபாகலா கே.ஜி.எப். தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கு சீட் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் டிக்கெட் கிடைத்துள்ளது.