டில்லி

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சரவண பவன் உரிமையாளர் உடனடியாக சரண் அடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தனது உணவக மேலாளர் மகள் ஜீவஜோதியை மணக்க விரும்பியதகவும் அதற்கு தடையாக இருப்பார் எனக் கருதி ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை ஆள் வைத்து கொலை செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. இதில் 10 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கபட்டது.

இந்த தண்டனையை அதிகரிக்க அரசு தொடுத்த வழக்கில் ஆயுள் தண்டனையாக அதிகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ராஜகோபால் இந்த மாதம் 7 ஆம் தேதிக்குள் சரண் அடைய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தமக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ராஜகோபால் சரண் அடைய மேலும் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு சரண் அடைய மேலும் காலக்கெடு அளிக்கப்பட மாட்டாது எனவும் உடனடியாக சரண் அடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ராஜகோபால் இன்று சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.