சென்னை,

திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத், தனக்கு  ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை அதிமுக தலைமை கழகத்திடம் இன்று ஒப்படைத்தார்.

அதிமுக தலைமை சார்பில், காரை ஒப்படைக்கும்படி சம்பத்துக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்தன் காரணமாக, காரை இன்று அதிமுக தலைமை கழகத்தில் தனது டிரைவர் மூலம் ஒப்படைத்தார்.

மதிமுகவில் விலகி அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு  அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, கட்சி சார்பாக கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி இனனோவா காரை பரிசளித்தார்.

இந்த கார் மூலமே அவர் கட்சி பிரசார கூட்டங்களில் பங்கேற்று வந்ததால், அவரை இன்னோவா சம்பத் என்று கட்சிக்காரர்கள் அழைக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து  ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட இன்னோவா காரை  கடந்த ஆண்டு ஜனவரி 3ந்தேதி அன்று கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர்  சசிகலா அவரை அழைத்து சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, காரை மீண்டும் வாங்கினார்.

ஆனால், தற்போது நாஞ்சில் சம்பத் டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இதன் காரணமாக அதிமுக தலைமைக்கழகம் கொடுத்திருந்த காரை திரும்ப ஒப்படைக்கும்படி அவருக்கு கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து காரை சம்பத் தலைமை கழகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.