எம்.ஜி.ஆர்., தயாரித்து, நடித்து பெரும் வெற்றிபெற்ற படம் உலகம் சுற்றும் வாலிபன் ஆகும். இது 1973-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று டைட்டில் கார்டு போடப்பட்டது.

அதாவது உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் படமாக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார். ஆனால் தீவிர அரசியலில் இறங்கியதால் அது நிறைவேறவில்லை. இந்த நிலையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற தலைப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகம் அனிமேஷன் படமாக உருவாகிறது.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேசன் தயாரிக்க, அருள்மூர்த்தி இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழா சென்னை, அடையாறில் உள்ள எம்ஜிஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினி, கமல்ஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.

எம்ஜிஆர்., பிறந்தநாளன இன்று இப்படம் துவங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த விழாவில் எம்ஜிஆர்., உடன் பணியாற்றிய நடிகைகள் லதா, சவுகார் ஜானகி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். ரஜினி, கமல் இருவரும் அரசியல் வருகையை அறிவித்த பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.