டெல்லி: டெல்லி சென்ற முதல்வர் விஜய் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை  சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு தேவைகள் குறித்த மனுவை அளித்தார்.

 முதல்வராக பதவி ஏற்றபிறகு, விஜய், முதன்முதலாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசினார். பிரதமரின் அலுவலகத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடல், மீனவர் பிரச்சினை உள்பட  தமிழகத்துக்கான  பல்வேற கோரிக்கைகள் கொண்ட மனுவை வழங்கினார்.

மேலும்,  இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

 மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு  முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்

மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம்  மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்

.மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் முதல்வர், பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டார்..

 

[youtube-feed feed=1]