சென்னை: அதிமுக இரண்டாக பிரிந்து தமிழ்நாடு அரசியலில் குதிரை பேரத்துக்கு வழிவகுந்த நிலையில், தற்போது இரண்டும் ஒன்றாக இணைந்துள்ளது. இதையடுத்து, சபாநாயகரிடம் வழங்கப்பட்ட கட்சி தாவல் தடை சட்டநடவடிக்கை குறித்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.

அதிமுகவில் எடப்பாடிக்கு எதிரான, சிவிசண்முகம் தலைமையில், எஸ்.பி.வேலுமணி உள்பட 20க்கும் மேற்பட்ட எம்எல்எக்கள் ஓரணியாக திரண்டு, விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு வழங்கியதுடன், அதற்கு பதிலாக அமைச்சர் பதவிகளை வேண்டியதாக தகவல்கள் பரவின. ஆனால், அதிமுக கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எங்களிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே தாங்கள் நியமித்தவரைதான் அ.தி.மு.க. கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், தவெகவுக்கு ஆதரவு கொடுத்த திமுக கூட்டணி கட்சிகளின் மிரட்டலுக்கு பயந்து அதிமுக அதிருப்தி அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வில்லை. மேலும் கொறடா உத்தரவை மீறி வேலுமணி அணியினர் செயல்பட்டுள்ளதால் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என தவெகவுக்கு கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் இசக்கி சுப்பையாஉள்பட 4 பேர், தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இது பேசும்பொருளாக மாறியது.
இதன் காரணமாக அதிருப்தி அணியில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பலர் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பினர். இதனால், எஸ்.பி.வேலுமணியும் எடப்பாடியை சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு எஸ்.பி. வேலுமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மறுக்கப்பட்டதாக தெரிகிறது. பதவி பறிக்கப்பட்டவர்களுக்குரிய இடத்தில் மற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு விட்டது. எனவே அவர்களிடம் இருந்து மீண்டும் பதவியை பறிக்க முடியாது. பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதம் கழித்து வேறு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, இன்று ( மே 27) சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலத்தில் எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினார்கள். இப்போதைக்கு கட்சி பதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எம்.எல்.ஏ. பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். எனவே எடப்பாடி பழனிசாமியுடன் அவர்கள் சமரசமாக செல்ல முடிவு செய்தனர்.
எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர், டாக்டர் சி.விஜய பாஸ்கர், கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் லீமா ரோஸ், அருள்மொழித்தேவன், ரவி மனோகரன், சேகர், திருத்தணி அரி, முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை 10 மணிக்கு சி.வி.சண்முகம் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 12.15 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க.வில் ஒரே அணியாக இணைந்தனர்.
எஸ்.பி. வேலுமணியுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, கே.சி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் லீமாரோஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 13 பேர் சென்றனர். சி.வி.சண்முகம், சி.விஜய பாஸ்கர், அருண்மொழி தேவன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வரவில்லை. அ.தி.மு.க.வில் இணைக்க மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆலோசனை கூட்டத்துக்கு வந்த எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த கே.சி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தபோது, அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அனைவரும் ஒன்றாகி விட்டோம். இப்போது எல்லோருமே ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் தாய் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாகவே இருக்கிறோம் என்றார்.
சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட கட்சி தாவல் தடை சட்டத்தில் முடிவு எடுக்க சபாநாயகருக்கு 90 நாட்கள் வரை அதிகாரம் உள்ளது. ஆனால் மனு கொடுத்த வர்கள் அதை வாபஸ் பெற 15 நாட்கள் மட்டுமே அவகாசம் . அதன் அடிப்படையில் இந்த மனுக்களை வாபஸ் பெற நாளை (28-ந்தேதி) வரை அவகாசம் உள்ளது.
இதன் காரணமாக, இ , சட்டமன்ற குழு தலைவர், கொறடா தொடர்பாக இரு தரப்பினர் அளித்த மனுக்களை சபாநாயகரை சந்தித்து அ.தி.மு.க.வினர் திரும்பப் பெற்றனர். மேலும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த மனுக்களும் சபாநாயகரிடம் இருந்து வாபஸ் பெறப்பட்டது. இரு அணிகள் இணைப்பால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 42ஆக உள்ளது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அ. தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
[youtube-feed feed=1]