சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைப்பு மேம்பாலம் இரும்பை பயன்படுத்தி அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்த மேம்பாலம் 1.2 கி.மீ. நீளம் கொண்டது. மேம்பாலத்திற்கான தூண்கள் எஃகு (Steel)ஐ கொண்டு உருவாக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலையான சேலம் இரும்பு ஆலை (SAIL) நிறுவனத்தின் திருச்சி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை 20 மாதங்களில் கட்டிமுடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான கான்கிரீட் பாலம் அமைக்க 24 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

தரையில் இருந்து 6.5 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த மேம்பாலத்தைத் தாங்கிப்பிடிக்கும் எஃகு தூண்கள் தரையில் இருந்து 30 மீட்டர் ஆழம் வரை அமைக்கப்பட உள்ளது.

இருவழி சாலையுடன் அமையவுள்ள இந்த பாலத்தை 53 தூண்கள் தாங்கிப் பிடிக்கும் என்றும் தூண்களை இணைக்கும் வகையில் அதன் மேல் 8.5 மீ அகலமுள்ள மூன்று க்ரிடர் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்மேல் ஸ்டீல் ஷீட்டுகள் போடப்பட்டு 20 செ.மீ. கனமுள்ள கான்கிரீட் ஸ்லாபுகள் போடப்பட உள்ளது. கடைசியாக இதன்மேல் தார்ச்சாலை போடப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

தவிர, கான்கிரீட் பாலங்களில் 20 மீட்டருக்கு ஒரு இணைப்பு உள்ளது போல் இல்லாமல் 75 மீட்டருக்கு ஒரு இணைப்பு இருக்கும் வகையில் உருவாக உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் அதிர்வு குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய பாலத்தின் மீது செல்ல இருக்கும் வாகனங்களின் என்ணிக்கை மற்றும் கனத்தைக் கருத்தில் கொண்டு அதனை தாங்கும் விதத்தில் தூண்கள், க்ரிடர் மற்றும் ஸ்டீல் ஷீட்டுகளின் கனம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்.

தாங்கள் திட்டமிட்டதை விட 2.5 மடங்கு அதிக எடையை தாங்கும் வகையில் அவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் 50 ஆண்டுகள் வரை துருப்பிடிக்காமல் நீடிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே மார்த்தாண்டம் பகுதியில் இதேபோன்று இரும்பு பாலம் அமைந்துள்ளது என்ற போதும் தமிழக அரசு சார்பில் முதல்முறையாக சென்னையில் அமையவிருக்கும் இந்த மேம்பாலம் சேலம் உருக்காலையின் பெயரை கூறும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.