சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்புவது சாத்தியமல்ல. அதனால்தான் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 12ஆயிரம் ஆசிரியர் பணியிங்கள் காலியாக உள்ளது. மேலும், ஆசிரியர்களின் பணி ஓய்வு வயது 60ஆக இருப்பதால், வயது முதிர்வு காரணமாக சுமார்  10ஆயிரத்துக்கும் மேற்ற ஆசிரியர்கள், சம்பளத்துக்காக மட்டுமே பணியாற்றி வரும் சூழல் உள்ளது. இதுபோன்றவர்களில் பலர் மாணாக்கர்களுக்கு பாடங்களை நடத்த முடியாத நிலையில், அவ்வப்போது விடுமுறைகளையும் எடுத்து, காலத்தை ஓட்டி வருகின்றனர். இதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய முயற்சி செய்யாத தமிழ்நாடு அரசு, காலியாக உள்ள பணியிடங்களுக்கு ரூ.8ஆயிரம், ரூ. 10ஆயிரம், ரூ. 12ஆயிரம் என்ற ஊதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,  காலி பணியிடங்களில் 10 ஆயிரம் நிரந்தர ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கு நிறைய கால அவகாசம் தேவை. எனவே பெற்றோர் – ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆகியவற்றின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு முதலில் தகுதித் தேர்வு தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட வேண்டும். அதன்பிறகு தேர்வுகளை நடத்தி சான்றிதழ்கள் சரிபார்ப்பு என கால அவகாசம் ஆகும்.  அதற்கு இன்னும் 6 மாதங்கள் இவற்றை எல்லாம் சரிசெய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதன்பிறகுதான், சுமார்  3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதற்கு  குறைந்தது 6 மாதங்கள் ஆகும். இதுதொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் பொறுப்பை கவனித்து கொள்வர் என்று தெரிவித்துள்ளார்.