இரும்பு தொழிற்சாலைகள், மாங்கனிகள், மாங்கனீசு, சில்வர் மற்றும் பட்டு போன்ற பெருமைகளோடு கூட சேலம் மாநகரத்துக்கு இன்னொரு பெருமையும் கிடைக்கவிருக்கிறது. ஆம், விரைவில் சேலம் ஒரு அழகான ஹை-டெக் நகரமாக உருமாறவிருக்கிறது.

salem

மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் ஸ்மார்ட் சிடி திட்டத்தில் இருக்கும் 27 நகரங்களுள் சேலம் நகரமும் ஒன்று. தடையற்ற மின்சாரம், தரமான சாலைகள், தடையற்ற குடிநீர் வசதி, எல்லா இடங்களிலும் வை-ஃபை வசதி என்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அத்தனை அம்சங்களும் சேலத்தை வந்தடையவிருக்கின்றன.
இத்திட்டத்தை ஒட்டி முதலாவதாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒரு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்த நூற்றுக்கணக்கான வீடுகளை இடித்து தள்ள வேண்டியிருக்கும் என்பதால் அதை தவிர்க்கும்படி அதிகாரிகள் இரண்டடுக்கு மேம்பாலம் என்ற ஒரு அட்டகாசமான திட்டத்தை தயார் செய்திருக்கின்றனர். இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த எந்த கட்டிடத்தையும் இடிக்க தேவையில்லை. இத்திட்டத்துக்கான அறிவிப்பு முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2012 டிசம்பரில் கொடுக்கப்பட்டது. டெண்டர்கள் கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் விடப்பட்டன. திட்டப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்த தகவலின்படி முதல் அடுக்கு மேம்பாலம் ஏவிஆர் ரவுண்டானாவில் தொடங்கி ஐந்து ரோட்டில் இரண்டாக பிரிந்து ஒன்று சாரதா கல்லூரி வழியாக போய் அழகாபுரத்தில் முடிவடையும். மற்றொன்று புதிய பேருந்து நிலையமருகே வந்து முடிவடையும். ஏவிஆர் ரவுண்டானாவிலிருந்து புதிய பேருந்து நிலையம் 2 கி.மீ தூரமாகும். இந்த மேம்பாலத்தின் அகலம் 13.6 மீட்டர்களாகும். ஐந்து ரோடு தொடங்கி அழகாபுரத்தில் வந்து முடிவடையும் மேம்பாலத்தின் அகலம் 7 மீட்டர்களகும்.
இரண்டாமடுக்கு மேம்பாலம் குரங்குசாவடியில் தொடங்கி ஐந்து ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தில் வந்து நிறைவடையும். இந்த மேம்பாலமும் நிந்து ரோட்டில் இரண்டாக பிரிந்து ஒன்று புதிய பேருந்து நிலையம் நோக்கியும் இன்னொன்று நான்குரோடு ஜங்க்‌ஷன் மற்றும் அண்ணா பூங்காவின் அருகே வந்து நிறைவடையும். குரங்கு சாவடியிலிருந்து புதிய பேருந்து நிலைய பாலத்தின் நீளம் 2 கி.மீ ஆகும். இப்பாலத்தின் அகலம் 13.60 மீட்டர்கள்.
சேலம் முனிசிபல் கார்ப்பரேஷன் திட்டப்பணிகளுக்காக பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. கார்ப்பரேஷன் ஸ்மார்சிட்டி திட்டத்தின்கீழ் எந்த பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மக்களிடம் கருத்துக்கேட்டு ஒரு சர்வே நடத்தியதில் பெரும்பாலான மக்கள் வ.உ.சி மார்க்கெட் மற்றும் பழைய பஸ்டாண்ட் ஆகிய இரு இடங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இவை இரண்டும் நகரின் அதிக ஜன நெருக்கடியுள்ள பகுதிகள் ஆகும்.
இது தவிர பல அடுக்கு கொண்ட பார்க்கிங் லாட்டுகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் போன்றவை வ.உ.சி மார்க்கெட் மற்றும் பழைய பஸ்டாண்டு பகுதிகளை அலங்கரிக்கவிருக்கின்றன. அதே நேரத்தில் அங்கு வாகன நெருக்கடியும் கட்டுப்படுத்தப்படும். இப்பணிகளை மத்திய, மாநில அரசுகள் தரும் நிதி கிடைத்தவுடன் தொடங்கிவிடுவோம் என்று கார்ப்பரேஷன் கமிஷனர் கே.ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.