சென்னை:
வுலிவாக்கம் கட்டிடம் வெடிபொருள் வைத்து இடிக்கப்பட்டது.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று, 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களை அருகருகே கட்டப்பட்டி வந்தது. இது ஒரு அடுக்குமாடி கட்டிடம் கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 28–ந்தேதி இடிந்து தரைமட்டமானது. கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 61 தொழிலாளர்கள் இறந்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே கட்டப்பட்டு வந்த இன்னொரு 11 மாடி கட்டிடமும் பலவீனமாக இருந்ததால் அதை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மவலிவாக்கம் கட்டிடம்..
மவலிவாக்கம் கட்டிடம்..

இதையடுத்து  அந்த ஆபத்தான 11 மாடி கட்டிடம் கட்டிடத்தை வெடிவைத்து தகர்க்ககும் பொறுப்பு திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.
கட்டிடத்தை இடிப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டு இன்று நிறைவடைந்தன. இன்று மதியம் 2 மணியில் இருந்து 4 மணிக்குள் வெடிமருந்து வைத்து தகர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 11 மாடி கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள 124 வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்தும், ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கையும் செய்யப்பட்டது. மேலும் காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்  மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வும் மேற்கொண்டனர்.
இடிப்பதற்கான ஆயத்தம்..
இடிப்பதற்கான ஆயத்தம்..

இரு வாகனங்களில் வெடி மருந்துகள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று காலை கட்டிடத்தில் வெடி மருந்துகளை பொருத்தும் பணி துவங்கியது. தரைதளம் மற்றும் ஐந்தாவது  தளத்தில் உள்ள தூண்களில்  துளைகள் போடப்பட்டு வெடி மருந்துகளை ஊழியர்கள் நிரப்பினர். மொத்தம் 162 தூண்களில் வெடி மருந்துகள் நிரப்பும் பணி முடிந்தது. அதன்பின் வெடி மருந்துகளில் வயர்கள் இணைக்கும் பணி துவங்கியது.
இந்த நிலையில் மதிய நேரத்துக்குப் பதிலாக மாலை ஐந்து மணிக்கு கட்டிடம் தகர்க்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால்  இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் கட்டடம் தரைமட்டமாகும் பணிகள் சில மணிநேரங்கள் ஒத்திவைக்கப்பட்டது…
தகர்ந்துகொண்டிருக்கிறது..
தகர்ந்துகொண்டிருக்கிறது..

இந்த நிலையில்  இன்று மாலை 6.55  மணிக்கு வெடி மருந்தை வெடிக்க வைக்க, ரிமோட் இயக்கப்பட்டது. இதையடுத்து ஐந்தாவது தளத்தில் பொருத்தப்பட்ட வெடி மருந்துகள் வெடித்தன.  அடுத்த சில வினாடிகளில் தரை தள தூண்களில் உள்ள வெடி மருந்து வெடிக்க வைக்கப்பட்டன.
தூள் தூளானது..
தூள் தூளானது..

மொத்தம்  பத்தே  வினாடிகளில் 11 மாடி கட்டிடம் முழுவதும் இடிந்து தகர்ந்தது.  கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட தூசி, துகள்கள்   எங்கும் பரவின. அதன் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை  பீய்ச்சி அடித்துக்கொண்டிருக்கின்றனர்.   புகை மண்டலம் குறையும் என்பதால் இந்த ஏற்பாடு.
தூசும் புகையும் மட்டுமே மிச்சம்
தூசும் புகையும் மட்டுமே மிச்சம்

இந்த பணி முடிந்ததும், கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி துவங்கும்.