ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோட்டில், மூத்த குடிமக்களிடம் தபால் வாக்கு பெறும் பணி நேற்று தொடங்கிய நிலையில், அதில் தில்லுமுல்லு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று மூதாட்டி ஒருவர் இரட்டை இலைக்கு வாக்கு பதிய சொன்ன நிலையில், கைது சின்னத்திற்கு வாங்கு செலுத்தியதாக தேர்தல் அதிகாரிகளை சிறைபிடித்து, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணிக்கம் அம்மாள் என மூதாட்டி தபால் வாக்கில்,  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்த நிலையில்,  மூதாட்டியின் வாக்கை கை சின்னத்தில் பதிவு செய்துவிட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 27ந்தேதி நடைபெற உள்ள நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுதிறனாளிகள், கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனோ பாதிப்பு இருப்பதாக சந்தேகிப்பவர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக தேர்தல் ஆணையம் 12 டி என்ற படிவம் மூலம் செலுத்த வழிவகை செய்துள்ளது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தபால் வாக்களிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர். இவர்களில் தபால் வாக்கு அளிக்க விருப்பமுள்ளவர்களிடம் படிவங்கள் பெறும் பணி நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 4 ம் தேதி வரை படிவம் பெறும் பணிகளானது நடைபெற்றது.மொத்தம் 31 மாற்று திறனாளிகள் உட்பட 352 பேர் 12 டி படிவம் மூலம் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து இருந்தனர்.  அதைத்தொடர்ந்து,  12 டி படிவம் பெற்ற நபர்களிடம் வீடு வீடாகச் சென்று அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக தபால் வாக்கு பதிவு நடைபெறு வருகிறது.

இந்த நிலையில்,  88 வயதான மாணிக்கம் அம்மாள் என்பவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்த நிலையில் அவரது வாக்கை கை சின்னத்தில் பதிவு செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தகவல் அறிந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மூதாட்டியின் வீட்டின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்ப தொடங்கினர்.  தபால் ஓட்டு பதிவில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுகவினர் குற்றச்சாட்டி அதிகாரிகளை சிறை பிடித்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் நேரில் வந்து ஆய்வு செய்து. விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அதிகாரிகள் மீத  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.