வ.ர.மே : 2: ஹெர்குலியன் டாஸ்க்… ரஜினிக்கு ஜூஜுபி! -நியோகி

Must read

வ.ர.மே : 2

ஹெர்குலியன் டாஸ்க்… ரஜினிக்கு ஜூஜுபி !                     –  நியோகி

பேராசைக்காரர்கள் வாழும் ஊரில், கேட்பாரில்லாமல் கிடந்த  பண மூட்டையைப் போல, சகட்டு மேனிக்கு அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது நமது தமிழ்நாடு !

“நீ…புடி ! நான்…புடி“ என்று ஆளாளுக்கு பிய்த்துக் கடாசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு ! தமிழ்க் கணக்கு ! சாதிக் கணக்கு ! தேசியக் கணக்கு ! கூட்டணிக் கணக்கு ! இனக்கணக்கு ! மனக் கணக்கு என ஆளாளுக்கு, நாக்கை மென்று கொண்டி ருக்கின்றார்கள் ! அவர்கள் எந்தக் கணக்குப் போட்டாலும்…அந்தக் கணக்கின் சூத்திரங்கள் எல்லாமே, மற்றொரு மூல சூத்திரத்துக்கு அடக்கம் என்பதால்…சகல கூடாரங்களிலும் எதிர்பார்ப்பு எகிறி, காய்ச்சலாகி, கன்னமூலங்கள் கனன்று போயிருக்கின்றது !

அந்த மூல சூத்திரம்…? அரசியல் சார்ந்து  திரு.ரஜினிகாந்த் எடுக்கப் போகும் அந்த முடிவு !

ஒருவேளை அரசியலுக்கு வருவதாக இருந்தால்…..அவர் சர்வ நிச்சயமாக தனிக் கட்சிதான் ஆரம்பிப்பார் என்றே என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது ! இனி ஒருமுறை, தனக்கானதொரு வாய்ப்பைத் தங்கத் தட்டில் தூக்கிக் கொடுத்து விட்டு வீடு திரும்ப அவர் தயாராக இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அது, மோடியின் பிஜேபியாகவே இருந்தாலும்… வாயும் வயிறும் வேறு வேறு என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கும் ! இருக்க வேண்டும் !

காரணம், இத்தனை வயதுக்குப் பிறகு அரசியலில் இறங்கி ஊர் ஊராக சென்று உழைத்து அதன் பலனை அடுத்தொரு கட்சியிடம் கொடுத்து , அவர்கள் அடித்துக் கொள்வதை வேடிக்கைப் பார்க்கும் இடத்தில் தன்னை இருத்திக் கொள்ள அவர் விரும்ப மாட்டார்.

சமீபத்தில் உடல் நலம் குன்றி, ஆபத்தின் எல்லைக்குச் சென்று, பின்பு குனமாகி, திரும்பி வந்த போது, ஒரு மேடையில் இப்படிப் பேசினார்…

”நடிப்பைப் பொறுத்த வரைக்கும் வேகம்தான் என்னுடைய பலம் ! அது குறைந்து போகிறது என்றால்… நான் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன்…”

அவ்வாறு வேகம் குறைந்து போய், நிறுத்துவதை விட…. தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில்…

வாழ்வில் தனக்குப் பணம், புகழ், மரியாதை, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து, என சகலமும் கொடுத்து, உயர்த்தி விட்ட தமிழக மக்களுக்கு, தன்னாலான பணியை செய்ய, நடிப்பதை நிறுத்தி அரசியல் களமிறங்குவது என்பது.. அர்த்தமுள்ளதாக இருக்கும் !

அவர் களமிறங்கினால் என்ன நடக்கும் ! நல்லாட்சி வந்து விடுமா…? பாலும் தேனும் பெருக்கெடுத்து விடுமா…? அவருக்கு ஆட்சி செய்து பழக்கமுண்டா…? இதுவரை எதற்காவது போராடியிருக்கிறாரா..? அவரது கொள்கை என்ன…? கோட்பாடுகள் என்ன….?  என்றெல்லாம் வசனம் பேசி வழவழப்பதை விட…இன்று முக்கியமான விஷயம்…

புரையோடிப் போயிருக்கும் இந்த “சிஸ்டத்தை” முதலில் சரி செய்ய வேண்டும் ! அதைத்தான் அவர் அழுத்தி சொல்கிறார். “சிஸ்டத்தை சரி செய்யாமல், யார் வந்து ஆண்டாலும் பயனேதும் இருக்கப் போவதில்லை” என்னும் பேருண்மையை போட்டு உடைத்திருக்கிறார்,

ஆம், அதிமுதலில்…சிஸ்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை போக்க வேண்டும். சிஸ்டத்தை காலம் காலமாக நசுக்கிப் பிழிந்தே பழகிப் போனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

தெருவோரத்தில் அமர்ந்து, பூ விற்கும் ஒரு பெண்ணிடம் இருக்கும் நியாய – தர்ம – நேர்மை உணர்ச்சியை, ஒட்டு மொத்த அரசாங்க அதிகாரிகளிடமும் கொண்டு வர வேண்டும்.

இதை நாடு முழுவதும் பரவலாக செய்து முடிக்க வேண்டும். அதையும்,  சீக்கிரம் சாத்தியப்படுத்த வேண்டும் எனில், அது சாதாரண விஷயமல்ல. இமாலய முயற்சியாகும்.

இவற்றுக்கெல்லாம் நிச்சயம் சட்டம் மட்டும் உதவாது. மக்களைக் கொண்டே தான் சரி செய்ய முடியும். அதுதான் மக்களாட்சிக்கு மாண்பையும் சேர்க்கும்.

அப்படியெனில் அதற்கு, முதலில் மக்களை ஒன்று திரட்ட வேண்டும். அவர்களின் கண் பார்வையிலேயே – அவர்களின் பங்கெடுப்புடனேயே, அதிகாரிகளின் உதவியோடு மொத்த சிஸ்டத்தையும் பழுது பார்த்து விட வேண்டும். முழுவதுமாக முடியவில்லையென்றாலும் 70 சதவிகிதம் சரி செய்து விட்டாலே, இங்கே யுகப் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும்.

அப்படி ஒரு யுகப்புரட்சி இங்கே நடந்தேற வேண்டுமானால், ஒரு உறுதியான நோக்கத்தை மக்களிடம் உருவாக்கி, குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது, அந்த நோக்கம் சிதறி விடாமல், மக்களை தொடர்ந்து ஒருமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மொத்த சிஸ்ட்த்தையும் மாற்ற முடியும்.

அந்த ஒருமுகப்படுத்துதல் தான் இப்போதைக்கு “ஹெர்குலியன் டாஸ்க்” ! ஆம், மக்களை தொடர்ந்து ஒருமுகப்படுத்தி வைப்பது என்பது சாதாரண காரியமில்லை. அது , அன்று அண்ணாவால் முடிந்தது – அடுத்து எம் ஜி ஆரால் முடிந்தது.

அந்த, “ஹெர்குலியன் டாஸ்க்“ கின் அடிப்படை, மக்களின் பரிபூரண அன்பு மற்றும் நம்பிக்கை ! அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வல்லது ரஜினியின் வசீகரம் ! அவ்வளவுதான் !

சிறுவர்கள் – மாணவர்கள் – மாணவிகள் – இளைஞர்கள் – தாய்மார்கள் – ஆண்கள் – படித்தவர்கள் – படிக்காதவர்கள் – உழைப்பாளிகள் என சகலரையும் ஒருமுகப்படுத்த ரஜினியால் மட்டுமே முடியும். காரணம் காலம் காலமாக அவருக்கு கிராமம் தோறும் இருக்கும் ரசிகர் மன்றங்களின் அகன்ற பைப்லைன் அப்படிப்பட்டது !

2002 ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி, 80,000 மன்றங்கள். ஒவ்வொரு மன்றத்துக்கும் 25 உறுப்பினர்கள். ஆகமொத்தம் 20 லட்சம் ரசிகர்கள். அதோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

20 லட்சம் ரசிகர்கள் களமிறங்கினால்….ஒவ்வொருவரும் தன் குடும்ப உறவுகள் வட்டாரத்தில் 10 பேரை கேன்வாஸ் செய்தாலே அது 2 கோடியை தொட்டுவிடும். அதற்கு, அவர்களோடு எப்படி “கம்யூனிகேட்” செய்ய வேண்டும் என்பது ரஜினிக்கு கைவந்த கலை.

அதன் பிறகு அவர் சொல்லும் ஒவ்வொரு நல்ல வார்த்தையையும் அவர்கள் வேத வாக்காக எடுத்துக் கொள்ள வைக்க முடியும். “லஞ்சம் கேட்டால் அடி…” என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டாரென்றால்…வெறும் அச்சத்திலேயே, அரசாங்க அலுவலகங்கள் எல்லாம் சுத்தமாகி விடக் கூடும்.  ஆனால், அதை ரஜினி சொன்னால் தான் எடுபடும் !

ஜல்லிக்கட்டு மாணவர்கள் தேடிக் கொண்டிருக்கும் ஓர் சுத்தமான தலைமையை அவரால் தர முடியும். மத்தியில் இருந்து ஆட்டிவைக்கும் வித்தையெல்லாம் இவரிடம் நடக்காது. தன்னை நம்பிய தமிழக மக்களைக் யாருக்கும் காட்டிக் கொடுக்காமல் விசுவாசமாக இருப்பார் என்று நம்பலாம். எல்லா மாநிலங்களிலும் எல்லா மட்டங்களிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு என்பதால் மாநிலங்களுக்கிடையேயான பல பிரச்சினைகளை அவரால் சுமூகமாக தீர்த்து விட முடியலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம் !! ஒருவேளை அவரது வாழ்வில் “அரசியல் என்ட்ரி” என்று ஒன்று எழுதி வைக்கப்பட்டிருக்குமானால்…இதுதான் அதற்குண்டான கடைசி வாய்ப்பு ! ஆம், ஓடிப் போய்க் கொண்டே இருக்கிறது வயது. இப்போதே 67.

அதனால்தான்…

”எங்கே…ரஜினி, தனிக் கட்சி ஆரம்பித்து விடுவாரோ…” என்று உள்ளுக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். யார், யார் அப்படி அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் விரித்துரைக்க வேண்டியதில்லை…  எல்லோருமேதான் !

ஏன்…? எதற்காக அஞ்சி நடுங்குகிறார்கள்..? ஒருவேளை ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் என்றால்…ஆண்டாண்டுக் காலமாக பொத்திப் பொத்தி வைத்திருந்த, “அரசியல் வாரிசு” களின் கிளிக் கனவுகள் அனைத்தும் சிக்கிச் சிதிலமாகி விடும் ! ஆம், ஒருவேளை, இவரது மன்றம் கட்சியானால்…அவர்களது கட்சிகள் மன்றங்களாகிவிடக் கூடும் !

மத்திய அதிகார பலத்தை வைத்துக் கொண்டு, மாநிலக் கட்சிகளில்,  ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என வித்தியாசம் பார்க்காமல், சகலரது ஊழல் பலவீனங்களையும் மிக மோசமாக கிளறிக் கலைப்பதன் மூலமாக…. அவர்களின் பிம்பங்களையெல்லாம் மொத்தமாக அடித்து வீழ்த்தி விட்டு, நாம் எளிதில் கால் பதித்து விடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பாஜகவின் வியூகங்கள் எல்லாம், ரஜினியின் தனிக்கட்சியின் முன்…ஒரு மத்தியானக் கனவாய் மக்கிப் போய்விடும் !

தமிழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் ஒரு பொருட்டே இல்லை. மேலும் , அதன் தற்போதைய தலைவர், ரஜினியின் நெடு நாள் நண்பர் ! எதிர்பாராததது கூட நடக்கலாம்.

சரி, அவரோடு கூட்டணி வைத்துக் கொண்டு, மனதைத் தேற்றிக் கொள்ளலாம் என்றால்…

“அதற்கு, எங்களுக்கு என்ன அவசியம்…?” என்று  ரஜினி தரப்பில் இருந்து, பதற வைக்கும் புன்னகையோடு கேட்கப்படலாம் ! ஆகக்கூடி, பல பேர்களின் அரசியல் ஆசையில் மண் விழுந்து போகலாம் !

பெரியார் போல, தேர்தல் அரசியல் அகன்று, நாடு முழுவதும் சுற்றி கொள்கை அரசியல் செய்யவதென்றால்….அது வைகோ அல்லது நல்லகண்ணு போன்றவர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் கதி..?

கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது…அரசியலில் தனிக்கட்சி என்னும் முடிவை ரஜினி எடுத்து விட்டாரென்றால்…பல பேர் இங்கே, பவானி ஜமுக்காளத்தை விரித்துக் கொண்டு,  மூணு சீட்டு ஆடப் போக வேண்டியதுதான் !

இன்றைய சூழலில், திரு. ரஜினிகாந்த் தனிக் கட்சி ஆரம்பித்து விட்டாரென்றால்…எம்ஜியாரின் வரலாறு மீண்டுமொருமுறை திரும்பும் !

ஆம், “இருக்கும் வரை அவர்தான் சி.எம்” !

இன்று தமிழக அரசியலில் உண்டாகியிருக்கக் கூடிய வெற்றிடம் 1996 லும் ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்தில், ரஜினிகாந்த் அரசியலில் இறங்கியே ஆக வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஒரு அற்புதமான வாய்ப்பு அவருக்கு அமைந்தது. ஆனால் அதை அப்படியே தூக்கி தாமக – திமுக கூட்டணியிடம் கொடுத்து விட்டுப் போனார்.

 

சர்வ சாதாரணமாக 173 இடங்களை திமுக வென்று தனித்து ஆட்சி அமைத்தது. ஆரம்பித்த வேகத்திலேயே தேர்தலை சந்தித்தாலும் 39 இடங்களை வென்றது தமாக. இவ்விரண்டுக்கும் பெரும் காரணம் ரஜினி மற்றும் அண்ணாமலையில் அவர் ஓட்டிய அந்த சைக்கிள் !

அந்த வெற்றிக்காக, மூப்பனார் மட்டுமே ரஜினிக்கு நன்று சொன்னார் ! அறுதிப் பெரும்பான்மை பெற்ற திமுக ரஜினியை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை ! மேலும், அந்தக் கூட்டணியிலும் கசப்பு வந்தது.

தமிழ்நாட்டு அரசியலில், தனக்கு வந்த அரிய வாய்ப்பை ….இப்படி தாரை வார்த்து விட்டாரே என்று, அதன் பிறகு ரஜினியை விமரிசிக்காத பத்திரிக்கைகளே இல்லை எனலாம்.

அன்று, அவரைப் பேசிப் பேசிக் கரைத்தது மூவர்.  ஒருவர் பத்திரிக்கையாளர் சோ – இன்னொருவர் கருப்பையா மூப்பனார் மற்றொருவர் ப.சிதம்பரம். அந்த மூவரில் இருவர் இன்று உயிரோடு இல்லை. மூன்றாமவர் வீட்டிலோ மத்தியின்  ரெய்டு !

என்ன அர்த்தம் !? அவரைப் பேசிக் கரைக்கப் பார்க்காதீர்கள் என்பதா..?

யாருக்குத் தெரியும்…?

கடவுளுக்கே வெளிச்சம் !

( தொடரும்…

More articles

Latest article