ஆகாயத்திலிருந்து பார்த்தல் – இயக்குநர் சீனு ராமசாமி கவிதைகள்!

Must read

ஆகாயத்திலிருந்து பார்த்தல்….. 

மேலிருந்து பார்த்தால்

பிள்ளை பெற்ற உன் வயிறு போல் கோடுகளால் ஆனது பூமி.

பாதுகாப்பு தகவல் தரும்

வட மாநில நங்கையின் 

முழங்கால் உறைக்கவசத்தில் 

இருந்த கவனம் 

அவளது அறிவிப்பில் இல்லை

புரிந்ததை பார்ப்பவன் 

புரியாததை கேட்டான்.

 

திருவிளையாடல் நாரதர் போல் மேகங்களுக்குகிடையேநிகழ்ந்தது 

முதல் விமான பயணம்.

 

ஆகாயத்தில் பறக்கும் போது உணரமுடிகிறது

மரத்தில் குஞ்சுகளை விட்டு விட்டு இரைக்கு அலையும் நிலை.

விருப்பத்தை சொல்லாமல் தேக்கிய உன் வைராக்கிய கண்களிடம் பயின்றிருக்கலாம்

றெக்கை அசையாமல்

பறக்கும் வித்தையை..!

 

வெளியே இருக்கும் ஊடகங்களுக்கு

தன் முகம் பளிச்சிட கழுவினார். 

விமான நிலைய கழிப்பிடத்தில்   

ஊழல் புகாரா ?

அப்படியா ?என்பதற்கு 

சிரித்து ஆச்சர்யம் காட்ட 

பவுடரும் பூசினார் தலைவர்.

 

பறக்கும் போது பிரார்த்தனை

இறங்கும் போது பிரார்த்தனை

இடையிலோ அயர்ச்சியில் குறட்டை..!

 

தரைக்கு அணி மாறும் தருணத்தில் 

நெட்டி முறிக்கும் கால்கள் போல் 

சக்கரங்கள் வெளிப்பட்டபோது

உள்ளே இருந்த

அரசியல்காரன் செருமினான்.

 

தனக்கு தரும் மதுவை

விமானிக்கும் தந்தால்தான்

பறத்தலின் விரீயம் தெரியும் என்பான் மூன்று கோப்பைக்கு மேல்அருந்திய விமான பயணி..!

 

வகுடெடுத்த

நிலப்பரப்பில்

ஓடி பறந்தது இயந்திர பறவை,

செந்நிற வயல் நண்டுகளை தூக்கிக்கொண்டு பறப்பதாகஓடுதளத்தை கொத்தி அலறியது ட மதுரை வெண்ணிற நாரை

-இயக்குநர் சீனு ராமசாமி

 

More articles

Latest article