சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இலங்கை மற்றும் அதையொட்டிய கடற்பகுதியில், 1.5 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில், இன்று முதல் வரும் 12ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

சென்னையில் அதிகபட்சம், 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். கடந்த, 24 மணி நேரத்தில், 1 செ.மீ அளவுக்கு எந்த இடத்திலும் மழை பெய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து அதிகப்படியான வெப்பநிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.