டில்லி

ராகுல் காந்தி மதத்தைப் பற்றிப் பேசியதாக பாஜக கூறியதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி  யாத்திரையை மும்பையில் நேற்று நிறைவு செய்தார். ராகுல் காந்தி பேசும்போது, “நாங்கள் ஒரு சக்திக்கு எதிராகப் போராடுகிறோம், பிரதமர் மோடி அந்த சக்தியின் முகமூடி” என்று குறிப்பிட்டார்..

அவர் இந்து மதத்தில் உள்ள சக்தி என்ற தெய்வீக சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறி பா.ஜ.க. விமர்சனம் செய்யத்தொடங்கியது. ராகுல் சனாதனத்திற்கு எதிராக யாத்திரை தொடங்கி, அதே பாணியில் யாத்திரையை நிறைவு செய்திருப்பதாகத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கும் அதை வழிபடுபவர்களுக்கும் இடையேதான் இந்த போராட்டம் என்று கூறி உள்ளார்.

ராகுல் காந்தி  தனது எக்ஸ் தளத்தில்,

”ஒரு சக்தியின் முகமூடிதான் மோடி என்று கூறினேன். அந்த சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று குறிப்பிட்டேன். அந்த சக்தியானது, இந்தியாவின் குரல், இந்தியாவின் அரசு நிறுவனங்கள், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், இந்தியத் தொழில்துறை மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலமைப்பு அமைப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

அதே சக்தியை (அதிகாரத்தை) பயன்படுத்தி, பிரதமர் மோடி இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்கிறார். அதேசமயம், ஒரு விவசாயி சில ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அதே அதிகாரத்தின் அடிமையாக இருக்கும் மோடி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் நாட்டின் ஏழைகள் மீது ஜி.எஸ்.டி. வரியைத் திணித்து அந்த சக்தியின் பலத்தை அதிகரிக்க நாட்டின் செல்வத்தை ஏலம் விடுகிறார். 

எந்த மத சக்தியையும் பற்றி நான் பேசவில்லை. அநீதி, ஊழல் மற்றும் பொய்யின் ‘சக்தி’ பற்றித்தான் பேசினேன். அதனால்தான் நான் அந்த சக்திக்கு எதிராகக் குரல் கொடுக்கும்போதெல்லாம் மோடியும் அவரது பொய்கள் நிறைந்த இயந்திரமும் கொதிப்படைகின்றன.” 

என்று பதிவிட்டுள்ளார்.