சென்னை:

மிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 3ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண விபரத்தை நுழைவாயில் முன்பு போர்டுகள் வைத்து காட்சிப்படுத்த வேண்டும் உத்தரவிடப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல தனியார் பள்ளிகள் அதிக அளவில் கல்விக்கட்டணம் வசூலிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து  கல்வி கட்டணம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள  தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில்,  கல்விக்கட்டண நிர்ணயக்குழு பரிந்துரையின் அடிப்படையில் கட்டணங்கள் பெறவேண்டும் என்றும், பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் கல்விக்கட்டண விபரத்தை நுழைவாயில் முன்பு போர்டுகள் வைத்து காட்சிப்படுத்த வேண்டும்  என்றும் கூறி உள்ளது.   தவறினால் தொடர்புடைய பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக . அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலும்,  வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும்  என்றவர், அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  தற்போது மேல்நிலை பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள பயோ மெட்ரிக் முறை, விரைவில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை  விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.